Skip to main content

வளர்ச்சிக்கு வழியில்லை: கடன், வட்டி திவாலுக்கு அழைத்து செல்லும் பட்ஜெட்: ராமதாஸ்

Published on 15/03/2018 | Edited on 15/03/2018

 

தமிழக பட்ஜெட்டில் வளர்ச்சிக்கு வழியில்லை என்றும், கடன், வட்டி திவாலுக்கு அழைத்து செல்லும் பட்ஜெட் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழக சட்டப் பேரவையில் 2018-19 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருக்கிறார். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல பினாமி அரசால் முடியாது என்பதை இந்த நிதிநிலை அறிக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. வளர்ச்சிக்கு வழி வகுக்காக இந்த நிதிநிலை அறிக்கையால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

நிதிநிலை அறிவிப்பில் தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் வேளாண்மை நிழல் நிதி நிலை அறிக்கை, பொது நிதிநிலை அறிக்கை ஆகியவற்றை கடந்த மாதம் பாட்டாளி மக்கள் கட்சி வெளியிட்டது. தமிழகத்தில் வேளாண் விளைபொருள் கொள்முதல் வாரியம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் அனைத்து தானியங்களையும் அரசே கொள்முதல் செய்யும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைப்பின்பற்றி, துவரை, உளுந்து, பச்சைப்பயறு ஆகியவற்றை தமிழக அரசு கொள்முதல் செய்யும்  என்று அறிவிக்கப்பட்டிருப்பது நல்லத் திட்டமாகும். அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பருப்பு வகைகளை கூட்டுறவு சங்கங்கள் மூலம் தமிழக அரசு மக்களுக்கு மலிவு விலையில் விற்க வேண்டும். அதேபோல், விழுப்புரம் மாவட்டம் பெலாக்குப்பம் பகுதியில் 450 ஏக்கரில் உணவுப் பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கதாகும். இதைத் தவிர பயனுள்ள அறிவிப்புகள் எதுவும் இல்லை.

தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப் பட்டிருந்தது. அதன்படி கடந்த இரு ஆண்டுகளில் 1000 மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் மதுக்கடைகளை மூடுவது குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை. மாறாக, மதுமூலமான வருவாய் அதிகரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதால் கூடுதலாக மதுக்கடைகளை அரசு திட்டமிட்டிருப்பது உறுதியாகிறது. இதை பாட்டாளி மக்கள் கட்சி முறியடிக்கும்.

பள்ளிக் கல்வித்துறையில் ஏராளமான சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதற்கேற்றவாறு நிதியும் கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதைவிட ரூ.273 கோடி மட்டுமே உயர்த்தி பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.27,205 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. கரும்பு கொள்முதல் விலை நிர்ணய முறை, அத்திக்கடவு & அவினாசி திட்டம் ஆகியவற்றில் விவசாயிகளுக்கு பினாமி அரசு பெருந்துரோகம் செய்திருக்கிறது.

2017-18 ஆம் ஆண்டில் 8.03% பொருளாதார வளர்ச்சி எட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது உண்மையானால் அதன் பயன்கள் அனைத்து விஷயங்களிலும் எதிரொலிக்க வேண்டும்.ஆனால், அதற்கான அறிகுறிகள் கூட தென்படவில்லை. 2017-18 ஆம் ஆண்டு ரூ.77234 கோடி வணிகவரி  ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.75264 கோடி மட்டுமே வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மொத்த வரி வருவாயும் ரூ.99590 கோடி என்ற இலக்கிலிருந்து நழுவி, ரூ.98,639 கோடியாக குறைந்து விட்டது. அதேநேரத்தில் பற்றாக்குறைகள் மட்டும் எல்லையில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன. நடப்பு ஆண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.15,930 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ,18,370 கோடியாக அதிகரித்திருக்கிறது. நிதிப்பற்றாக்குறை, கடன் ஆகியவையும் அதிகரித்துள்ள நிலையில்,  அதுகுறித்த விவரங்களை வெளியிடாமல் தமிழக அரசு திட்டமிட்டு மறைத்திருக்கிறது. 2018-19ஆம் ஆண்டில் நிதிப்பற்றாக்குறை  ரூ.44,480 கோடியாக அதிகரிக்கும், அதை சமாளிக்க ரூ.43,962 கோடி கடன் வாங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் 2018-19-ஆம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.3 லட்சத்து 55,844 கோடியாக அதிகரிக்கும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.

தமிழக ஆட்சியாளர்களுக்கு நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாது என்பதைத் தான் இது காட்டுகிறது. வரும் ஆண்டில் கடனுக்கான வட்டியாக மட்டும்  தமிழக அரசு ரூ.29,624 கோடியை செலுத்தும். மானியங்களுக்காக மட்டும் ரூ.75,723 கோடியை செலவழிக்கும். இந்த இரண்டுக்காக மட்டும் தமிழக அரசு செலவழிக்கும் தொகை ரூ.1,05,347 கோடியாகும். ஆனால், தமிழக அரசின் வரி வருவாய் ரூ.1,12,616 கோடி மட்டுமே. இந்த வருவாயைக் கூட பினாமி அரசால் ஈட்ட முடியாது என்பதால் வரி வருவாயை விட, இலவசங்களுக்கு அதிக செலவு செய்து சாதனை படைக்கப்போகிறது பினாமி அரசு. இலக்குகளை விட குறைவாக செலவு செய்வதும், அதிக வருவாய் ஈட்டுவதும் தான் நல்ல அரசுக்கு அடையாளம் ஆகும். ஆனால், தமிழக அரசின் செயல்பாடுகள் தலைகீழாக உள்ளன.

2018-19 ஆம் ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் சுமையையும் கருத்தில் கொண்டால்  அரசின் மொத்தக் கடன் ரூ. 7 லட்சம் கோடியை எட்டக்கூடும். அதாவது தமிழக மக்கள் ஒவ்வொருவரின்  தலையிலும் தலா ரூ.1 லட்சம்  கடனை சுமத்தியுள்ளது பினாமி அரசு. பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த நல்ல அம்சங்களைப் பின்பற்றியிருந்தாலே நிதிநிலை அறிக்கை மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆனால், தமிழக அரசு அதை பின்பற்றவில்லை. அதன் விளைவாக திவாலை நோக்கியப்  பயணத்தில் தமிழகத்தையும், தமிழக மக்களையும் மேலும் சில அடி முன்னோக்கி அழைத்துச் சென்றுள்ளது பினாமி அரசு. இது மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய சாதனை அல்ல.... வெட்கித் தலைகுனிய வேண்டிய வேதனை ஆகும். இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“இலங்கை அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Ramadoss condemns  filing of a  case against 10 Tamil Nadu fishermen

தமிழக மீனவர்கள் 10 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்ற நாகை மற்றும் கடலூர் மாவட்ட மீனவர்கள் 10 பேரை கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ள இலங்கைக் கடற்படையினர், அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். ஒரு குற்றமும் செய்யாத தமிழக மீனவர்கள் மீது பொய்யான கொலை வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.

நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆனந்த் என்பவருக்கு சொந்தமான  விசைப்படகில் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், கடலூர் மாவட்ட மீனவர் ஒருவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரு மீனவர்கள்  என மொத்தம் 10 பேர் கடந்த ஜூன் 23 ஆம் நாள் வங்கக்கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், தங்களின் சுற்றுக்காவல் படகை தமிழக மீனவர்களின் படகு மீது மோதியுள்ளனர்.

அதில் சுற்றுக்காவல் படகில் இருந்த ரத்னாயகா என்ற வீரர் கடலில் விழுந்து காயமடைந்தார். உடனடியாக அவர் காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தமிழக மீனவர்கள் 10 பேரும் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்த நாளே கடலில் விழுந்து மீட்கப்பட்ட கடற்படை வீரர் ரத்னாயகா உயிரிழந்து விட்டதால் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசால் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில், கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து இந்திய வெளியுறவுத்துறை உயர் அதிகாரி ஒருவரை அழைத்த இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள், நடுக்கடலில் நடந்த சண்டையில் தான் இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா கொல்லப்பட்டதாகக் கூறி, அதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி, மீன் பிடிப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோல்,  இந்தியாவுக்கான இலங்கை தூதர் சேனுகா செனவிரத்னே தில்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை  சந்தித்து இலங்கை கடற்படை வீரர் கொல்லப்பட்டது குறித்து சிங்கள அரசின் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்கு கடுமையாக தண்டனையை  பெற்றுத்தருவதன் தொடக்கமாகவே இலங்கை வெளியுறவு அமைச்சகத்தின் செயல்பாடுகள் தெரிகின்றன.

இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகாவின் உயிரிழப்புக்கு தமிழக மீனவர்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. அவர்கள் அப்பாவிகள். வங்கக்கடலில் பிழைப்புக்காக மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களை  கைது செய்யும் நோக்குடனும், தாக்கும் நோக்குடனும் அவர்களின் படகுகள் மீது இலங்கைக் கடற்படை வீரர்கள், தங்களின் ரோந்து படகுகளை அதிவேகமாக ஓட்டி வந்து மோதினார்கள்.

அதனால் ஏற்பட்ட நிலைகுலைவில் தான் இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா முதுகுத் தண்டில் காயமடைந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மருத்துவம் பயனின்றி உயிரிழந்தார்.  இது முழுக்க முழுக்க விபத்து. அதுவும் இலங்கைக் கடற்படையினரால் ஏற்படுத்தப்பட்ட விபத்து. அதற்கு எந்தத் தவறும் செய்யாத அப்பாவி தமிழக மீனவர்களை பொறுப்பாக்குவதும், தண்டிக்கத் துடிப்பதும் நியாயமல்ல.

இலங்கை கடற்படை வீரர் ரத்னாயகா கொலை வழக்கில் தமிழக மீனவர்களை தொடர்புப்படுத்தி இலங்கை வெளியுறவுத்துறை தெரிவித்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும்,   கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரியும் என்ன பதில் கூறினார்கள்? என்பது தெரியவில்லை. வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்து வரும் பகுதிகளில் தொடர்ந்து மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உள்ள உரிமைகளைப் பறிக்க இலங்கை தொடர்ந்து சதி செய்து வருகிறது.

அதற்காக தமிழக மீனவர்கள் போதை மருந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர், இலங்கை வீரர்களை கொலை செய்கின்றனர் என்பன போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அவற்றை மத்திய அரசு ஏற்கக் கூடாது. இன்னும் கேட்டால் இதுவரை 800&க்கும் கூடுதலான தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அதற்கு காரணமான சிங்கள வீரர்களை தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கும்படி தான் இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு அழுத்தம் கொடுத்து, தமிழக மீனவர்கள் 10 பேர் மீதான கொலை வழக்கை திரும்பப் பெறச் செய்யவும், அவர்களை விடுதலை செய்து தாயகத்திற்கு அழைத்து வரவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக வங்கக் கடலில் எல்லைகளைக் கடந்து தமிழ்நாடு மற்றும் இலங்கை மீனவர்கள் முறை வைத்து மீன்பிடிக்கும் வகையில் ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'அப்பட்டமான விதிமீறல்; வெளிமாநில தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும்'-அன்புமணி வலியுறுத்தல்

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
'Grant violation; We need a foreign election officer'-Anbumani insists

திமுக எம்எல்ஏவின் மறைவை அடுத்து விக்கிரவாண்டியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த இடைத்தேர்தலில் திமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் போட்டியில் இறங்கியுள்ளன. இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அப்பட்டமான விதிமுறைகள் நடைபெறுவதாகவும், எனவே தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் எனவும்  பமாக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தேர்தல் விதிமீறல்கள் மற்றும் வன்முறைகளை ஆளும் திமுக கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. திமுகவினரின் சட்டவிரோத செயல்களை தட்டிக் கேட்ட பா.ம.க. மற்றும் அதிமுகவினர் மீது ஆளும் திமுகவைச் சேர்ந்த குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். திமுகவின் அத்துமீறல்களை தடுக்க வேண்டிய காவல்துறையும், தேர்தல் அதிகாரியும் அவர்களுக்கு துணை போவது கண்டிக்கத்தக்கது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கு திமுகவின் 9 அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு துணையாக மற்ற அமைச்சர்களும், 80க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், பல்லாயிரக்கணக்கான உள்ளாட்சிப் பிரதிநிதிகள் விக்கிரவாண்டியில் குவிந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான மகிழுந்துகளில் தொகுதியை வலம் வருகின்றனர். இது அப்பட்டமான விதிமீறல் என்பதால், அந்த மகிழுந்துகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஆனால், அதை செய்யாமல்  அவர்களுக்கு விழுப்புரம் மாவட்டக் காவல்துறையும், அதிகாரிகளும் பாதுகாப்பு அளித்துக் கொண்டுள்ளனர்.

விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் கோயில் நிலங்கள், புறம்போக்கு நிலங்கள் ஆகியவற்றை ஆக்கிரமிப்பு செய்து திமுகவினர் கூடாரங்கள் அமைத்துள்ளனர். அங்கு திமுகவினர் பெருமளவில் கூடி மது அருந்தி, சீட்டு விளையாடி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சட்டவிரோதமான இத்தகைய கட்டமைப்புகளை அகற்ற வேண்டுமென அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இத்தகைய கூடாரம் அமைப்பதற்காக ஆசூர் கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் கண்ணதாசன் என்பவர் சட்டவிரோதமாக  மணல் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதுபற்றி அதிகாரிகளிடம் புகார் செய்த அப்பகுதி அதிமுக கிளைச் செயலாளர் கந்தன் என்பவரை கண்ணதாசன் கொடிய ஆயுதங்களால் தாக்கியுள்ளார். அதைத் தட்டிக்கேட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் கிளைத் தலைவர் அண்ணாதுரையும் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

திமுக கிளைச் செயலாளர் கண்ணதாசன் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா, கள்ளச்சாராயம் போன்றவற்றை விற்பனை செய்து வருபவர் என்றும், பல வழக்குகளில் அவர் தேடப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இப்போது பா.ம.க. மற்றும் திமுக நிர்வாகிகளை தாக்கியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவரை  கைது செய்வதற்கு பதிலாக மருத்துவமனையில் சேர்த்து திமுகவினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு அளித்து வருகின்றனர். தேர்தல் அதிகாரியும் இதை வேடிக்கை பார்க்கிறார்.

விக்கிரவாண்டி தொகுதியில் காலமான 15000 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்களின் ஒட்டுகளை கள்ளவாக்குகளாக போட திமுகவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களின் வாக்குகளை நீக்க வேண்டும்  என்று பா.ம.க. சார்பில் பலமுறை புகார் அளித்தும் அதன் மீது தேர்தல் அதிகாரி நடவடிக்கை எடுக்கவில்லை. இவை அனைத்துக்கும் உச்சமாக தேர்தல் அதிகாரி சந்திரசேகர் கடந்த சில நாட்களாக தேர்தல் அலுவலகத்துக்கு வருவதே இல்லை. கோட்டாட்சியர் நிலையிலான அவரால் திமுக அமைச்சர்களின் அழுத்தங்களையும், மிரட்டல்களையும் மீறி நேர்மையான முறையில் பணியாற்ற முடியாது. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிய நாளில் இருந்தே திமுகவின் அத்துமீறல்கள் மீது  நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்ட தேர்தல் அதிகாரி சந்திரசேகரால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலை நியாயமாக நடத்த முடியாது என்பது உறுதியாகி விட்டது. தேர்தல் பார்வையாளர் விக்கிரவாண்டியில் இல்லாமல் விழுப்புரத்தில் தங்கியுள்ளார். அவரும் திமுக மீதான புகார்களை கண்டுகொள்வது கிடையாது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஓரளவாவது நியாயமாக நடைபெற வேண்டும் என்றால், தமிழக அரசின் அதிகார வரம்புக்குள் வராத வெளிமாநில கேடரைச் சேர்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ஒருவர் தான் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும். எனவே, தேர்தல் அதிகாரி சந்திரசேகரை அந்தப் பணியில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும். அவருக்கு பதிலாக வெளிமாநில இ.ஆ.ப. அதிகாரி ஒருவரை தேர்தல் அதிகாரியாக நியமிக்க வேண்டும். தேர்தல் விதிமீறல்களை தடுப்பதற்காக  ஒன்றியத்திற்கு இரு பார்வையாளர்கள், விக்கிரவாண்டி பேரூருக்கு ஒரு பார்வையாளர் என மொத்தம்  5 பார்வையாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும். திமுகவினரின் தேர்தல் விதிமீறல்கள் குறித்து இதுவரை பா.ம.க. சார்பில் அளிக்கப்பட்ட அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.