சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "கருப்பு பூஞ்சைப் பாதிப்பைக் கண்டு மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் தகவல் தெரிவிக்கப்பட வேண்டிய நோயாக கருப்பு பூஞ்சை அறிவிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் கருப்பு பூஞ்சையால் இதுவரை உயிரிழப்பு ஏற்படவில்லை. கரோனாவுக்குப் பின்னர் கருப்பு பூஞ்சை நோய் உருவானதாகக் கூறுவது தவறானது. கருப்பு பூஞ்சை என்ற மியூகார்மைகோசீஸ் நோயைப் பற்றி மக்கள் அச்சப்பட வேண்டாம்; குணப்படுத்தக் கூடியதுதான்.
தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் 7 பேர் உள்பட 9 பேருக்கு கருப்பு பூஞ்சை ஏற்பட்டுள்ளது. கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள 9 பேரும் நலமுடன் இருக்கின்றனர். கருப்பு பூஞ்சைப் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு விதிகளை மக்கள் முறையாகப் பின்பற்றினால் மட்டுமே கரோனா பரவல் குறையும். சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா பாதிப்பு சற்று குறைகிறது" எனத் தெரிவித்தார்.