விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்றும் (09.11.2024), நாளையும் (10.11.2024) கலந்துகொள்கிறார். இதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தந்தபோது விருதுநகரில் உள்ள தனியார் பட்டாசு தொழிற்சாலையைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொழிற்சாலை பெற்றுள்ள உரிமச் சான்றினை ஆய்வு செய்தார். அங்குப் பட்டாசுகள் தயாரிப்பதற்கான இரசாயனப் பொருட்கள் வைப்பறை, தயாரிக்கப்படும் இடங்கள், பட்டாசுகள் வைப்பறை, மைக்ரோ கார்டு திரி வைப்பறை போன்ற இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து சூலக்கரை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடி, அவர்களிடம் பள்ளி மற்றும் காப்பகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். அங்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் ஆசிரியர்கள் பாடம் நடத்துவது குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து ராமமூர்த்தி சாலை வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனப் பேரணி மேற்கொண்டார். அப்போது சாலையின் இருபுறங்களிலும் திரண்டுள்ள மக்களைப் பார்த்து கையசைத்தபடி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேரணியில் ஈடுபட்டார். மேலும் அவரைக் காண வழி நெடுக திரண்ட தொண்டர்கள், பொதுமக்கள் அவரின் பதாகைகளை ஏந்தி வரவேற்று மகிழ்ந்தனர். திமுக தொண்டர்கள் கொடுத்த சால்வை உள்ளிட்ட பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். இந்த பேரணியின் போது அங்கிருந்த குழந்தையைக் கண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வண்டியை நிறுத்தி அந்த குழந்தைக்கு சாக்லேட் கொடுத்தார்.