கரோனா காரணமாக தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. கூட்டத்தொடர் நாளை (14/09/2020) தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறும் என்று சபாநாயகர் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, பேரவை கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் கலைவாணர் அரங்கில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக கலைவாணர் அரங்கம் காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. அதைத் தொடர்ந்து கலைவாணர் அரங்கம் பகுதியில் காவல்துறையினர் மோப்ப நாய் உதவியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல் கலைவாணர் அரங்கத்தின் உட்புறம் மற்றும் வெளிப்புற பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணிகளும் தீவிரமடைந்துள்ளன.
இதனிடையே, முதல்வர், துணை முதல்வர், சட்டமன்ற உறுப்பினர்கள், காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு ஏற்கனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சட்டப்பேரவைக்கு வரும் அனைவரும் கரோனா பரிசோதனை முடிவு சான்றிதழை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.