கடலூர் மாவட்டத்தில் மங்களூர், நல்லூர் ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களில் சேர்மன் பதவிக்கான மறைமுகத் தேர்தல் கடந்த 30ஆம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் அன்று நல்லூர் ஒன்றியத்தின் தேர்தல் அதிகாரியாக இருந்த ரவிசங்கர் உடல்நிலை சரியில்லாமல் தேர்தல் நடத்த வராததால் அன்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் மறைமுகத் தேர்தல் நடப்பதாக அறிவிக்கப்பட்டு, அதன்படி தேர்தல் அதிகாரி பிரபாகரன் தேர்தலை நடத்திவைத்தார்
இதில் திமுக கூட்டணி சார்பில் வேப்பூர் கவுன்சிலர் துரைக்கண்ணு போட்டியிட்டார். அவர் எதிர்த்து அதிமுக கூட்டணியில் பாமக கவுன்சிலர் செல்வி ஆடியபாதம் போட்டியிட்டார். இதில் செல்வி ஆடிய பாதத்திற்கு ஆதரவாக 12 வாக்குகளும், திமுக துரைக்கண்ணுவுக்கு 9 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து தேர்தல் அதிகாரி பிரபாகரன் பாமக வேட்பாளர் செல்வி ஆடியபாதம் வெற்றி பெற்றதாக அறிவித்து சான்றிதழ் வழங்கினார்.
நல்லூர் ஒன்றிய சேர்மன் பதவியை பிடிக்க எக்ஸ் ஒன்றிய சேர்மன் அதிமுக ராஜலட்சுமி கணவர் ஒ.செ. ராஜேந்திரன் துணையோடு கடும் முயற்சி செய்தார். ஆனால் பாமக தரப்பு முதல்வர் எடப்பாடி வரை சென்று பேசி நல்லூர் ஒன்றியத்தை பாமகவிற்கு ஒதுக்கி தரவேண்டுமென்று ஒப்புதல் பெறப்பட்டது. முதல்வரே நேரடியாக தலையிட்டு பாமகவிற்கு விட்டுக் கொடுக்கும்படி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரனிடம் எடுத்துக் கூறியதாகவும் அதை அடுத்து ராஜேந்திரன் தரப்பு பாமகவுக்கு விட்டுக் கொடுத்தது என அதிமுக தொண்டர்கள் தெரிவிக்கிறார்கள்.
மேலும் 2011 முதல் 2016 வரை இங்கு ஒன்றிய சேர்மனாக தன் மனைவி ராஜலட்சுமி அமரவைத்து அதன்மூலம் தனது அரசியல் வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார் ராஜேந்திரன் என்றும் மீண்டும் அவரை இங்கு ஒன்றிய சேர்மனாக ஆக்கினால் சரியாக இருக்காது என அந்தக் கட்சியில் உள்ள சிலர் கட்சி மேலிடம் வரை சென்று உள்குத்து அரசியல் செய்ததை அடுத்து ராஜேந்திரன் மனைவிக்கு சேர்மன் சீட்டு மறுக்கப்பட்டுள்ளது என்றும் பேசப்படுகிறது.
மங்களூர் ஒன்றியத்தில் மொத்தம் 24 கவுன்சிலர்கள். இதில் கடந்த 30ஆம் தேதி சேர்மன் பதவிக்கு மறைமுக தேர்தலை தேர்தல் அதிகாரி பிரபாகரன் நடத்தினார். அப்போது திமுக தரப்பில் பொடையூர் தொகுதி கவுன்சிலர் சுகுணா திமுக சார்பில் போட்டியிட்டார். அதிமுக சார்பில் வாகையூர் ஒன்றிய கவுன்சிலர் மலர்விழி போட்டியிட்டார். இருவருக்கும் தலா12 வாக்குகள் என சமமாக கிடைத்தது. இதை அடுத்து தேர்தல் அதிகாரி பிரபாகர் குலுக்கல் முறையில் தலைவரை தேர்வு செய்ய முடிவு செய்தார். ஆனால் அதிமுக தரப்பில் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் ஈபிஎஸ் துணை முதல்வர் ஓபிஎஸ் ஆகிய இருவரையும் 14 கவுன்சிலர்கள் மெஜாரிட்டி உள்ளது என சென்னை வரை அழைத்துப்போய் காட்டி ஒப்புதல் பெற்றனர். மா.செ. அருண்மொழிதேவன் தலைமையில் இதை அடுத்து இன்று மீண்டும் மறைமுகத் தேர்தல் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் அறிவித்தனர். ஆனால் திமுக வேட்பாளர் சுகுணா திமுக எம்எல்ஏவும் மாவட்ட செயலாளர் கணேசன் மூலம் கட்சித் தலைமை வரை சென்று ஆலோசிக்கப்பட்டு சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று மறைமுகத் தேர்தலுக்கு வரும் ஆறாம் தேதி வரை தடை உத்தரவு பெற்றுள்ளனர். இதுபற்றி கணேசன் நம்மிடம் "எங்களைப் பொருத்தவரை கடந்த 30ஆம் தேதி மறைமுகத் தேர்தல் முறையாக முடிக்கப்பட்டுவிட்டது.
ஆனால் குலுக்கல் முறையில் சேர்மன் தேர்வு செய்வதை விட்டுவிட்டு கவுன்சிலர்களை வளைத்து எப்படியும் சேர்மன் பதவியை பிடிக்க அதிமுக தரப்பில் கடும் முயற்சி செய்கிறார்கள். அது தவறான முன்னுதாரணம் என்பதால் நீதிமன்றத்தை நாடி உள்ளோம். நீதிமன்றத்தின் மூலம் சரியான தீர்ப்பு கிடைக்கும் என நம்புகிறோம்" என்கிறார். அதிமுக வேட்பாளர் மலர்விழி இளங்கோவன் தவிப்பில் உள்ளார்.