போலீஸ் பாதுகாப்புக் கோரி ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரான அமிர்தம் பட்டியல் இனத்தவர் என்பதால் சுதந்திர தினத்தன்று கொடியேற்ற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை எஸ்.பி. முன்னிலையில் அவர் கொடியேற்றினார்.
இந்த நிலையில், தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி ஆத்துப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், 'பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், தொடர் மிரட்டல் இருப்பதால் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (26/12/2020) விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதிபதி, ஊராட்சி மன்றத் தலைவர் அமிர்தத்துக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குவது பற்றி தமிழக அரசும், காவல்துறையும் விளக்கமளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.