Skip to main content

இப்படியும் திருமணம் செய்யலாம்..! தமிழக ஜோடியின் ஆழ்கடல் சாகசம்...

Published on 02/02/2021 | Edited on 02/02/2021

 

tamilnadu couple married under deep sea...

 

வாழ்வில் மிக முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் திருமண நிகழ்வை, பலர் வியக்கும்படியும் சிறப்பாகவும் நிகழ்த்தவேண்டும் என்கிற எண்ணம் தோன்றுவது இயல்பானதே. ஆனால், சிலர் மலை உச்சியில் திருமணம், காற்றில் பறந்தபடி திருமணம், கப்பலில் திருமணம், கரோனா திருமணம் என வித்தியாசமாகவும் பிரபலமானதாகவும் தங்கள் திருமண நிகழ்வை மாற்றியிருக்கின்றனர். 

 

அந்தவகையில், தற்போது கடலுக்கடியில் நடைபெற்ற திருமணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சின்னதுரை (29) மற்றும் கோயம்புத்தூரைச் சேர்ந்த ஸ்வேதா(26) ஆகிய இருவரும் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். பணியிட நண்பர்களாக இருந்தவர்கள் வாழ்கையை இணைந்தே தொடர திருமணம் செய்ய முடிவெடுத்தனர். 

 

இருவீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றுவந்தன. தனது திருமணத்தை சாகசம் நிறைந்ததாக நடத்த விரும்பிய சின்னதுரை, ஆழ்கடலில் திருமணம் செய்யத் திட்டமிட்டார். அதனை, குடும்பத்தினரிடம் தெரிவித்து சம்மதத்தையும் பெற்றார். மேற்கொண்டு புதுச்சேரியைச் சேர்ந்த தனது உறவினரான ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்தனின் வழிகாட்டுதலில் சின்னதுரை, ஸ்வேதா இருவரும் நீலாங்கரை கடற்பகுதியில் நான்கு நாட்கள் ஆழ்கடல் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 

தகுந்த பயிற்சிக்குப் பிறகு மணமக்கள் இருவரும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கடலுக்குள் படகில் சென்று 60 அடி ஆழத்தில் முறைப்படி தாலிகட்டி திருமணம் செய்துகொண்டனர். அவர்களது திருமணச் செய்தியும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்குமுன் கேரளாவைச் சேர்ந்த ஜோடி, கடலில் 12 அடி ஆழத்தில் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தின் போது மணமகனின் அநாகரிக செயல்; அதிரடி முடிவு எடுத்த மணப்பெண்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
The bride who broke off the wedding in kerala

கேரளா மாநிலம், பத்தனதிட்டம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 32 வயது வாலிபர். இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. மேலும், இவர்களது திருமணம் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், திருமண நாள் அன்று, மணமகன் மது குடித்துவிட்டு போதையில் மணமேடைக்கு வந்து கொண்டிருந்தார். இதனைக் கண்ட, மணப்பெண் உள்பட அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், மது போதையில் இருந்த மணமகன், பாதிரியாரிடமும், மணபெண்ணின் உறவினர்களிடம் தகராறு செய்துள்ளார். இதனைக் கண்டு கோபமடைந்த மணப்பெண், திருமணம் வேண்டாம் என்று அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனால், அவர்களது திருமணம் பாதியில் நின்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அங்கு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை கண்ட அங்கிருந்தவர்கள், இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், இரு வீட்டாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணப்பெண் குடும்பத்தினர், ‘தங்களுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை என்றும், திருமணத்திற்கு பெரும் தொகை செலவு செய்ததால், அந்த தொகையை நஷ்ட ஈடாக திரும்ப தர வேண்டும். இல்லையென்றால், மணமகன் மீதும், அவரது உறவினர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, மணப்பெண் குடும்பத்தினர் செலவு செய்த தொகையான 6 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக திரும்ப கொடுக்க மணமகனின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து, அனைவரும், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, மது போதையில் அனைவரிடமும் தகராறு செய்ததற்காக மணமகனின் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.