
பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட உள்ள வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து, தற்போது அது இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும், முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை, நவம்பர் ஆறாம் தேதி முதல் டிசம்பர் ஆறாம் தேதி வரை, வேல் யாத்திரை நடத்த இருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார்.
இந்த வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி, சென்னையைச சேர்ந்த பத்திரிக்கையாளர் பாலமுருகன் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்துள்ளனர்.
அந்த மனுக்களில், தொற்றுப் பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக, விநாயகர் சதுர்த்தி, மொகரம் உள்ளிட்ட மத நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், மாநிலம் முழுவதும் ஒரு மாத காலம் வேல் யாத்திரை நடத்தும் போது, மூன்று ஆயிரம் முதல் ஐந்தாயிரம் பேர் வரை கூட இருப்பதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது.
மேலும் இந்து பெண்கள் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டது. அதுபோன்ற சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
யாத்திரைக்கு அனுமதி வழங்கினால், கரோனா தொற்றை கட்டுப்படுத்த, தமிழக அரசு, மருத்துவர்கள், பல துறை ஊழியர்கள் எடுத்து வரும் அனைத்து முயற்சிகளும் வீணாகும். யாத்திரை முடியும் நாளான டிசம்பர் ஆறாம் தேதி, பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினமாகும். அதன் காரணமாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயம் உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் மனுதாரர்கள் தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், செந்திகுமாரின் மனுவை இன்று (05/11/2020) விசாரணைக்கு எடுத்து கொள்வதாகத் தெரிவித்துள்ளனர்.