நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆய்வுபணிகளை மேற்கொள்ளவந்த கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு பணிகளுக்கு சென்ற இடங்களைவிட கோயில்களுக்கே அதிகமாக சென்றார்.
ஆய்வு செய்வதற்காக சிதம்பரத்தில் இருந்து நேற்று மாலை புறப்பட்ட கவர்னருக்கு நடராஜர் கோயிலில் சிறப்பு பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அங்கிருந்து காரில் நாகப்பட்டினம் செல்லும் வழியில் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலுக்கு சென்றார்.
அங்கு நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமாரால் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தருமபுரம் இளைய ஆதீனம் தலைமையில் சிவாச்சாரியார்கள் பூர்னகும்பம் மரியாதை செய்தனர். பிறகு கோயிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கோ பூஜையில் கலந்துகொண்டார். அங்குள்ள விநாயகர், அமிர்தகடேஷ்வரர், அபிராமி அம்மன் உள்ளிட்ட சன்னதிகளில் சாமிதரிசனம் செய்துகொண்டு திருநள்ளார் கோயிலுக்கு காரில் புறப்பட்டார்.
திருநள்ளார் சனிஸ்வரன் கோயிலுக்கு சென்றார், அங்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் கேசவன் தலைமையில் அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்துகொண்டு மீண்டும் காரில் நாகப்பட்டினம் சுற்றுலா மாளிகையில் தங்கினார்.
இன்று காலை 10 மணிக்கு சில நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பிறகு பொதுமக்களிடம் சுற்றுலா மாளிகையில் இருந்தபடியே மனுக்களை வாங்கிக்கொண்டார். மாலை 5 மணிக்கு வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி சாமிதரிசனம் கண்டார். அங்கு கவர்னருக்கு பேராலயம் சார்பில் மணிமாலை அணிவிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து நாகூர் ஆண்டவர் கோயிலுக்கு சென்றவருக்கு கோயில் நிர்வாகத்தினர் மங்கலவாத்தியம் முழங்க வரவேற்று, ஆண்டவர் சமாதிக்கு சென்று சிறப்பு பிராத்தனை செய்துகொண்டார். ஆளுனருக்கு கோயிலின் சார்பில் சேவை செம்மல் விருது வழங்கப்பட்டது.
கவர்னரின் ஆய்வுகுறித்து மாவட்ட ஆட்சியரக அதிகாரி ஒருவர் கூறுகையில்,’’ஆய்வு என்கிற பெயரில் பொதுமக்களையும், பள்ளிக்குழந்தைகளையும் எங்களை போன்ற அரசு அதிகாரிகளையும் அவதிப்பட வைக்கிறாங்க. இன்று அவர் ஆய்வு செய்ததினால் ஏதாவது மாற்றங்கள் நிகழ்ந்துவிட போகுதா?, ஆய்வு என்கிற பெயரில் அவரது வேண்டுதல்களையெல்லாம் பாதுகாப்போடு ஒரே நேரத்தில் நேர்த்தியா நிவர்த்தி செய்கிறார். ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருக்க வேண்டிய பள்ளிக் குழந்தைகளை வேகாத வெயிலில் காக்கவைத்ததால் என்ன மாற்றம் நிகழ்ந்துவிட போகுது எல்லாம் அரசியல் லாபத்திற்காகத்தான்.’’ என்றார் வேதனையுடன்.
இதற்கிடையில் கவர்னரின் வருகையை கண்டித்து திமுக விசிக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் கருப்புக்கொடி காட்ட முயன்றதால் தள்ளுமுள்ளு நடந்தது. இன்றைய ஆய்வை முடித்துக்கொண்டு ரயில் மூலம் புறப்பட்டார்.
- க.செல்வகுமார்