
மக்கள் பிரதிநிதிகளான எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை, சிறப்பு நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன. இந்த வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறும் எம்.எல்.ஏ, எம்.பி.க்கள் உடன்டியாகப் பதவியிழப்பார்கள். இந்தச் சூழலில், சிறப்பு நீதிமன்றத்தின் விசாரணையை விரைவுப்படுத்த தேவையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளதற்கு, உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.
இந்தியாவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனை விரைந்து விசாரிக்க, தனி நீதிமன்றம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதற்கேற்ப பல மாநிலங்களில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றம், “சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க, உயர் நீதிமன்றங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிடவில்லை. அதனால் சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து எம்.பி., மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்கத் தேவையில்லை " எனத் தெரிவித்திருந்தது.
இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, நேற்று (04/11/20) விசாரித்தது. அப்போது, "சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கு, அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது தொடர்பாக 15 நாட்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர்.