பொங்கல் திருநாள் முடிந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “பொங்கல் திருநாளை சொந்த ஊரில் கொண்டாடிவிட்டு சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக, 19.01.2025 பிற்பகல் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் அட்டவணைப்படி தினமும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், 20.01.2025 அன்று கிளாம்பாக்கத்தில் பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கூடுதலாக 500 பேருந்துகள் அதிகாலை முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தற்போது இயக்கப்பட்டு வரும் 482 பேருந்துகளுடன் சேர்த்து ஆக மொத்தம் 982 பேருந்துகள் இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், 19.01.2025 அன்று பிற்பகல் முதல் 20.01.2025 வரை பயணிகளின் கூட்ட நெரிசல் குறையும் வரை கிளாம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, கோயம்பேடு, மாதாவரம் புறநகர் பேருந்து நிலையம், செங்குன்றம், எழும்பூர் இரயில் நிலையம் மற்றும் சென்ட்ரல் இரயில் நிலையம் ஆகிய முக்கிய பேருந்து நிறுத்தங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பேருந்து இயக்கத்தினை கண்காணித்திட உத்தரவிடப்பட்டுள்ளது என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.