தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், போகி பண்டிகையுடன் தொடங்கி (13.01.2025) தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.
அதே சமயம் பொங்கல் திருநாளை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்டு, மீண்டும் திரும்பிய வண்ணம் உள்ளனர். இந்நிலையில் சென்னையில் 87.32 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது போகி பண்டிகையை ஒட்டி பயன்பாட்டில் இல்லாத 87.32 மெட்ரிக் டன் கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன.
ஜனவரி 11ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை 34 ஆயிரத்து 748 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அதே சமயம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட எல்லைப்பகுதியில் சுமார் 18.80 மெட்ரிக் டன் டயர் மற்றும் டியூப்கள் பெறப்பட்டதாகச் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.