அதிமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் 108வது பிறந்த நாள் இன்று (17.01.2025) தமிழ்நாடு அரசின் சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவரது உருவச் சிலைக்கு அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அமைச்சர்கள் எஸ். ரகுபதி, தா.மோ. அன்பரசன், பி.கே. சேகர்பாபு, எஸ்.எம்.நாசர் ஆகியோர் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், எம்.ஜி.ஆரின் நினைவு இல்லத்தில் அவருக்கு மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை (அதிமுக) தொண்டர்கள் இயக்கமாக உருவாகி அதனை மக்கள் இயக்கமாக மாற்றினார். தமிழகத்தில் மூன்று முறை வெல்ல முடியாத முதலமைச்சராகப் பதவி வகித்துப் பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தவர் என இன்றைக்கும் வரலாறு உள்ளது. அப்படிப்பட்ட வரலாற்றை உருவாக்கிய அதிமுகவை எம்ஜிஆர் நிறுவினார். ஜெயலலிதா, அதிமுகவை 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வைத்தார். ஆறாவது முறையாக ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று இதுவரை எந்த மாநிலமும் செயல்படுத்த முடியாத மக்கள் நலத்திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.
எம்.ஜி.ஆர். பிறந்த இந்த நாளில், ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின் படி அனைவரும் இணைந்து வரவிருக்கிற தேர்தலை எதிர்நோக்கினால் நம்மை வெல்ல யாராலும் முடியாது என்ற சூழ்நிலை உருவாகும். அனைவரும் இணைந்து செயல்பட வேண்டியது தான் எங்களின் தலையாய கோரிக்கை. உண்மையான எதிர்க்கட்சி என்பது தொண்டர்களின் உரிமையைப் பாதுகாக்கும் குழுவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிற நாங்கள் தான் என்பதை இன்றைக்குத் தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த குழு ஆரம்பித்த நாளிலிருந்து இன்று வரை, தினம்தோறும் ஆளும் அரசின் மெத்தனப் போக்கு, கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றாதது, அன்றாடம் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவற்றை மக்கள் மன்றத்திற்குக் கொண்டு செல்லும் பணியில் நாங்கள் தான் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த வகையில் ஆளுங்கட்சிக்கு உண்மையான எதிர்க்கட்சி நாங்கள் தான் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்களில் பார்த்திருப்பீர்கள். அவர்கள் எந்த அளவிற்கு மக்களின் கோரிக்கைகளை எடுத்து வைக்கிறார்கள் என்று பார்த்தால் அவ்வாறு எதுவும் இல்லை. உலகத்திலேயே எங்கும் இல்லாத கூட்டணியாக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் இணைந்திருக்கிறது. இதைப்பற்றித் தான் அனைத்து மக்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஒரு முதலமைச்சர் எதிர்க்கட்சி தலைவரைப் பார்த்து ஹலோ! ஹலோ! சுகமா?. என்று கேட்கிறார். அதற்கு எதிர்க்கட்சி தலைவரும், ‘ஆமாம், நீங்களும் நலமா?’ எனக் கூறுகிறார். இப்படி தான் சட்டப்பேரவை நிகழ்வுகள் சென்று கொண்டிருக்கின்றன. நாங்கள் தொடர்ந்து கட்சியை இணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். உலகத்திலேயே பிரிந்த சக்திகள் இணையக் கூடாது எனச் சொல்லக்கூடிய ஒரே நபர் அவர்தான். இதனை நாட்டு மக்களும், தொண்டர்களும் நன்றாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள்” எனப் பேசினார்.