Skip to main content

8 வருட தனிமை; மனைவிக்கு சிலை வைத்த கணவர்

Published on 26/05/2023 | Edited on 26/05/2023

 

sivakasi old man wife memory statue viral video 

 

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 70). இவரது மனைவி ஈஸ்வரி. இத்தம்பதியருக்கு இரு மகன்கள் மற்றும் இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு முன்பு ஈஸ்வரி இறந்துவிட்டார். மேலும் மகன்கள் மற்றும் மகள்கள் திருமணம் ஆகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

 

இந்நிலையில் நாராயணன் தனது மனைவி ஈஸ்வரி இறந்ததில் இருந்து தனிமையில் வசித்து வந்துள்ளார். மேலும் மனைவியின் பிரிவையும் அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வீட்டின் முன்பு ஈஸ்வரியின் நினைவாக வெண்கல சிலை ஒன்றை நிறுவி வழிபட்டு வந்துள்ளார். இருப்பினும் மனைவியின் முழு உருவ சிலையை வீட்டில் நிறுவும் முயற்சியில் இருந்து வந்துள்ளார்.

 

அதனைத் தொடர்ந்து தனது மனைவியின் முழு உருவ சிலிகான் சிலையை வடிவமைக்க பெங்களூரில் உள்ள நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்திருந்தார். அந்த நிறுவனமானது சிலையை தத்ரூபமாக 9  லட்ச ரூபாய் செலவில் வடிவமைத்து கொடுத்துள்ளது. இந்த நிலையில் ஈஸ்வரியின் நினைவு நாளான நேற்று (25.05.2023) அவரது வீட்டில்  சிலையை வைத்து நாராயணன் தனது மகன்கள் மற்றும் மகள்கள் குடும்பத்தினருடன் வழிபாடு செய்தார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The forcing a man to drink urine for eloping with married woman

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர்.