Skip to main content

“வியாபார நோக்கில் தமிழக அரசு உயர்த்தி உள்ளது”- பாலகிருஷ்ணன் பேட்டி

Published on 18/08/2019 | Edited on 18/08/2019

திண்டுக்கல்லுக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்  பத்திரிகையாளர்களிடம் பேசும் போது....
 

balakrishnan

 

 

"பால் கொள்முதலுக்கு நான்கு ரூபாய்  விலையை உயர்த்தி விட்டு விற்பனையில் ரூ 6 உயர்த்திருப்பதற்கான அவசியம் என்ன வியாபார நோக்கில் அரசு விலை உயர்த்தி உள்ளது.  தமிழக  மக்களுக்கான எந்த ஒரு திட்டமும் அரசிடம் கிடையாது. 

அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். வேலூர் தேர்தலில் ஆளும் கட்சியினருக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதாக கூறும் முதலமைச்சர்  உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் யாருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பது தெரியவரும்.

மத்திய அரசு தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. மத்திய அரசின் செயல்பாட்டினால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது இதனை மறைப்பதற்காகவே மக்களை பதட்டமான வைப்பதற்காகவே மோசமான மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். இதற்கு உடனடியாக ஜனாதிபதியும்  அனுமதி அளித்து வருகிறார்.

முதலமைச்சரும் அமைச்சர்களும் கொள்ளையடிப்பதில் தான் கவனமாக உள்ளனர் மக்களுக்கு ஆக்கபூர்வமான பணிகள் எதுவும் செய்யவில்லை. அமைச்சர் மணிகண்டன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால்தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழகம் மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் குடி மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 10 சதவீதம் மட்டுமே வேலைகள் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள 90 சதவீதம் பணிகள் நடைபெறாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினர் குடிமராமத்து பணி என்ற பெயரில் மொத்தமாக பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.

நீலகிரியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது அதை பார்க்க வேண்டும் என்ற அக்கறை தமிழக முதல்வருக்கு கிடையாது. தற்போது பெய்த மழையினால் கேரளாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது இதனைப் பார்க்க ஒரு  மத்தியஅமைச்சர் கூட கேரளாவிற்கு செல்லவில்லை" என்று கூறினார். இந்த  பேட்டியின்போது திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ  தோழர் பாலபாரதி. முன்னாள் சிபிஎம் மாவட்ட செயலாளர் பாண்டியன். இந்நாள் சிபிஎம் மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்