
கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய அரசு நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்தியது. ஆனால், புதிய கல்விக் கொள்கையின் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி பா.ஜ.க தவிர தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். அதே சமயம் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் மூன்றாவது மொழியை கற்றுக்கொண்டால் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக் கூடும் என்று பா.ஜ.கவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் கல்வி தொடர்பான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு உருவாகியது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியது.
இதற்கிடையில், தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தமாறு அந்தந்த மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என பா.ஜ.கவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தொடுத்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது, ‘மாநில அரசு, தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தாதது மக்களின் அடிப்படை உரிமையை மீறு செயல் அல்ல. நீங்கள் டெல்லியில் உள்ளீர்கள், உங்களுக்கு இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்றால் கற்றுக்கொள்ளுங்கள்’ என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.