
தமிழக வனத்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி கடந்த ஞாயிற்றுகிழமை நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியவர், பெண்கள் குறித்தும், சைவ - வைனவ சமயம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் பலரும் எதிர்வினையாற்றி வந்தனர்.
சொந்த கட்சியான திமுகவிலே கண்டன குரல்கள் எழுந்தது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, 'அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது' என தனது எதிர்பை பதிவு செய்திருந்தார்.
ஏற்கனவே பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் குறித்து பேசி பொன்முடி சர்ச்சையில் சிக்கியிருந்த நிலையில் இந்த விவகாரமும் பூதகரமாக மாறியது. இந்நிலையில் இந்த சர்ச்சை பேச்சின் எதிரொலியாக திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பிலிருந்து பொன்முடி அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் திமுகவின் துணை பொதுச் செயலாளராக திருச்சி சிவாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார்.
இந்த நிலையில் பொன்முடியின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், “அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு வன்மையான கண்டனத்திற்குரியது. பொறுப்பற்ற இந்த பேச்சுக்காக அவர் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.