Skip to main content

ஆதிச்சநல்லூர் ஆய்வுகளைக் கண்டு பெருமைகொள்ளும் தருணத்தில் தமிழர்கள் சாதியால் பிளவுபட்டு மோதிக்கொள்வது வரலாற்றுப் பெருந்துயரம்-சீமான் கடும் கண்டனம்

Published on 19/04/2019 | Edited on 19/04/2019

தமிழ்த் தேசிய இனத்திற்கும் நேரிட்ட பேரிழப்புபொன்பரப்பி சாதிய தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  கூறியிருப்பதாவது,

 

vv

 

தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மறப்போர் நிகழ்த்திட்ட அண்ணன் பொன்பரப்பி தமிழரசன் அவர்கள் உலவித் திரிந்த அதே மண்ணில் இன்றைக்குச் சாதிய மோதல்களும், தாக்குதல்களும் நிகழ்வது பெரும் மனவலியைத் தருகிறது. ஆதிச்சநல்லூர் ஆய்வுகளைக் கண்டு உலகத்தார் தமிழர்களின் பெருமையையும், தொன்மையையும் கொண்டாடிக்கொண்டிருக்கிற இவ்வேளையில் தமிழர்கள் சாதியால் பிளவுபட்டு மோதிக்கொண்டு நிற்கிறார்கள் என்பது வரலாற்றுப் பெருந்துயரம்.

 

தமிழ்த்தேசிய இனத்தின் ஓர்மைக்கு ஊறு விளைவிக்கும் விதமாக தமிழ்ச்சமூகங்களிடையே எழும் இச்சாதிய மோதல்களும், உள்முரண்களும் ஒட்டுமொத்த இன மக்களையே வெட்கி தலைகுனிய வைக்கின்றன. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உலகத்திற்கே உயிர்ம நேயத்தைப் போதித்த மேன்மை நிறைந்த தமிழ்ச்சமூக மக்களிடையே நிகழும் இதுபோன்றத் துயரங்கள் நம்மை பல நூற்றாண்டுகளுக்குப் பின்னே இழுத்துச் செல்கிறது. மூவேந்தர் ஆட்சிக்காலம் தொட்டு, தற்காலம் வரை சொந்த ரத்தங்களுக்குள்ளே யுத்தம் செய்ததாலேயே இவ்வினம் வீழ்ந்தது என்பது மறக்கவியலா வரலாற்றுப் பேருண்மை. இதனை இளைய தலைமுறை தமிழ்ப்பிள்ளைகள் இனியாவது உணர்ந்து கொண்டு சாதி மத உணர்வுகளைப் புறந்தள்ளி, தமிழர் எனும் உணர்வோடு தமிழ்த்தேசிய ஓர்மையைக் கட்டமைக்கவும், உழைக்கும் ஆதித்தமிழ்க்குடிகளின் உயர்வுக்குப் பாடுபடவும் முன்வர வேண்டும்.

 

பொன்பரப்பியில் நிகழ்ந்த சாதியக் கொடுமைகள், தாக்குதல்கள் யாவும் வன்மையானக் கண்டனத்திற்குரியது. அதனை எதன் பொருட்டும் அனுமதிக்க முடியாது. ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் நாம் மோதிக்கொள்ளும்போது சிந்தும் நமது இரத்தத்தைக் குடிக்கிற ஓநாய்களாக இம்மண்ணை ஆளுகிற ஆட்சியாளர்களும், கட்சிகளும் இருக்கின்றனர். இத்தகைய சாதியச் சிந்தனையும், சாதிய மோதல்களுமே தமிழினத்தின் விடுதலையைச் சாத்தியப்படுத்த பெரும் தடைக்கல்லாக இருக்கிறது.

 

 

பொன்பரப்பியில் சாதிய மோதல்களைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் எவராயினும் அவர்கள் மீது எவ்விதப் பாகுபாடுமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும், இக்கலவரத்தில் தாக்குதலுக்கு உள்ளான ஆதித்தமிழ்க்குடிகள், உடமைகளையும், வீட்டையும் இழந்த உழைக்கும் மக்கள் யாவருக்கும் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். மேலும், இக்கலவரத்தில் பாதிக்கப்பட்டத் தமிழ்க்குடிகள் மீண்டு வர தன்னாலானப் பொருளாதார ரீதியான உதவிகளையும், சட்ட நடவடிக்கைகளையும் நாம் தமிழர் கட்சி மேற்கொள்ளும் என இத்தருணத்தில் உறுதியளிக்கிறேன்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கஞ்சா வியாபாரியைப் பிடிக்கச் சென்ற போலீசார் மீது கொலைவெறி தாக்குதல்; வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
A attack on the police who went to catch a ganja dealer; Exciting scenes released

சென்னை கண்ணகி நகர் சுனாமி நகர்  குடியிருப்பு 64ஆவது பிளாக்கில் வசித்து வரும் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளவர் உமாபதி. கஞ்சா விற்பனை செய்த வழக்கில் இதற்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். விசாரணைக்குப் பிறகு சிறைக்குச் சென்று விட்டு வெளியே வந்த அவர், அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களைக் கத்தியால் வெட்டி இருக்கிறார். இரண்டு தினங்களுக்கு முன்பு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுத்ததால் இரண்டு பேரை அவர் கத்தியால் வெட்டியுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று மாலை கைது செய்ய முயன்றனர். அப்போது அங்கிருந்த கற்களை எடுத்து போலீசாரை கொடூரமாக தாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள், போலீசாரைக் காப்பாற்ற முயன்றனர். உடனே கடுப்பான அந்தக் கஞ்சா ஆசாமி, அந்தப் பகுதி மக்களுக்கும் மிரட்டல் விடுத்தபடி அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.