
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று முன்தினம் (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர். 9 இடங்களில் இலக்குகளைக் குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது.
இத்தகைய சூழலில் தான் ஜம்மு - காஷ்மீரின் எல்லைக் கிராமத்தில் நேற்று (08.05.2025) இரவு பாகிஸ்தான் நடத்திய கடுமையான தாக்குதலின் போது பொதுமக்களின் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சேதமடைந்தன. பாகிஸ்தான் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் வாகனங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்தன. அதே சமயம் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் தொடர்ந்து நிலவி வரும் பதற்றம் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு - காஷ்மீரில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மே 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் மூடப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் கல்வி அமைச்சர் சகினா இட்டூ நேற்று தெரிவித்திருந்தார்.
அதன்படி ஜம்மு - காஷ்மீர் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்றும் (09.05.2025) நாளையும் (10.05.2025) விடுமுறை விடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ராணுவம் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், “மே 8 மற்றும் 9, 2025 அன்று இரவு, மேற்கு எல்லை முழுவதும் பாகிஸ்தான் ஆயுதப்படைகள் ட்ரோன்கள் மற்றும் பிற வெடிமருந்துகளைப் பயன்படுத்திப் பல தாக்குதல்களை நடத்தின. ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தான் துருப்புக்கள் ஏராளமான போர் நிறுத்த விதிமீறல்களை (CFV) மேற்கொண்டன. ட்ரோன் தாக்குதல்கள் திறம்பட முறியடிக்கப்பட்டன. மேலும் போர் நிறுத்த விதி மீறல்களுக்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.