
ஜம்மு - காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி (22.04.2025) பயங்கரவாதக் கும்பல் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இன்று (07.05.2025) நள்ளிரவு 01.44 மணி அளவில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நள்ளிரவில் முப்படைகள் கூட்டாக இணைந்து அதிரடி தாக்குதல் நடத்தினர்.
9 இடங்களில் இலக்குகளை குறிவைத்து தீவிரவாத அமைப்புகளைத் துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் 26 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியது. தொடர்ந்து பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் தற்போதுவரை போர் பதற்றம் நீடித்து வருகிறது.
ஏற்கனவே நேற்று நாடு முழுவதும் போர் பாதுகாப்பு ஒத்தியை நடைபெற்றது. தமிழகத்திலும் சென்னையில் துறைமுகம், கல்பாக்கம் ஆகிய பகுதிகளில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்நிலையில் இன்று இரண்டாம் நாளாக சென்னை விமான நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
சென்னை விமான நிலையம் பகுதியில் தொழில் பாதுகாப்புப் படையினர், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினர், தமிழ்நாடு காவல்துறை என அனைவரும் இணைந்து ஒத்திகையை மேற்கொண்டனர். ஒருவேளை எதிரிகள் விமான நிலையத்தில் மீது தாக்குதல் நடத்தினால் எவ்வாறு மீட்பது; எப்படி தப்பிப்பது; தங்களைப் பாதுகாத்துக் கொள்வது; என்னென்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு அளிக்கும் வகையில் ஒத்திகை அரங்கேற்றப்பட்டது.