Skip to main content

ஆண்டுக்கு 4.50 லட்சம் விபத்துகள்; 1.50 லட்சம் உயிர்ப் பலிகள்... சாலை பாதுகாப்பு விழாவில் அதிர்ச்சி தகவல்!

Published on 01/02/2021 | Edited on 01/02/2021

 

Road Safety week rally in salem district

 

இந்தியாவில் போக்குவரத்து விதிகளை மீறுவதால் ஆண்டுதோறும் சராசரியாக 4.50 லட்சம் சாலை விபத்துகள் நடப்பதும், அவற்றால் 1.50 லட்சம் பேர் உயிரிழப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் சாலை பாதுகாப்பு வார விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், சாலை விபத்துகளைத் தவிர்ப்பது, போக்குவரத்து விதிகளை மதித்தலின் அவசியம், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.

 

நடப்பு ஆண்டில், ஜனவரி மாதம் முழுவதுமே சாலை பாதுகாப்பு விழாவாக கொண்டாடப்பட்டது. நிறைவு பகுதியாக, தமிழ்ச்சாலை பண்பாட்டு இயக்கம் சார்பில் ஜலகண்டாபுரம் முதல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தம்பையா, சாலை விபத்துகள் குறித்த பல்வேறு தகவல்களைக் கூறினார்.

 

''உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில் சாலை விபத்துகள் நடக்கின்றன. ஆண்டுதோறும் சராசரியாக 4.50 லட்சம் விபத்துகள் நடக்கின்றன. இவற்றில், 1.50 லட்சம் பேர் பலியாகின்றனர். 4.50 லட்சம் பேர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர்.

 

ஒவ்வொரு ஆண்டும் நீதிமன்றங்களில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட மரணங்கள், விபத்தினால் ஏற்பட்ட கொடுங்காயங்கள் என 10 லட்சம் வழக்குகளுக்கு மேல் பதிவாகின்றன. இந்த வழக்குகளுக்காக 2 கோடி மனித உழைப்புக்கான நேரம் செலவிடப்படுகிறது. இதனால் இந்தியாவில் ஆண்டுக்கு 1.47 லட்சம் கோடி ரூபாய் செலவாகிறது என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. 

 

சாலை விபத்துகளுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இதில், அதிவேகம் காரணமாக 73.5 சதவீத விபத்துகள் நடக்கின்றன. குடிபோதையில் வாகனம் ஓட்டுவதன் மூலம் 3.5 சதவீத விபத்துகள் நடக்கின்றன. தவறான பாதையில் ஓட்டுவதால் 5.1 சதவீத விபத்துகளும், சிவப்பு விளக்கை மதிக்காமல் வண்டியை இயக்குவதால் 6 சதவீத விபத்துகளும், செல்ஃபோனில் பேசிக்கொண்டே ஓட்டுவதால் 2.6 சதவீத விபத்துகளும் ஏற்படுகின்றன. இவை மட்டுமின்றி, இதர வழிகளில் 14.7 சதவீத விபத்துகள் நடக்கின்றன.

 

ஒரு விபத்தால் பாதிக்கப்பட்டவரின் வலியும், வேதனையும் பிறரால் எளிதில் உணராத முடியாத வகையிலேயே இருக்கிறது. உயிர் பலி மற்றும் உடல் உறுப்புகள் சேதாரத்தால் குடும்பத்தின் வாழ்வாதாரம் மொத்தமாக பறிபோய் விடுகிறது. இதன்மூலம் ஒவ்வொரு விபத்துக்குப் பின்னாலும் கண்ணுக்குத் தெரியாத பெரும் சோகங்கள் ஒளிந்துகொண்டிருக்கின்றன.

 

விபத்து அபாயங்களைத் தவிர்க்க, மத்திய, மாநில அரசுகள் உடனடியாக சாலை பாதுகாப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும். அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் பாதசாரிளுக்கென தனி நடைபாதை அமைக்க வேண்டும். சாலை பாதுகாப்பு படை உருவாக்க வேண்டும். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கென தனி பாதை ஏற்படுத்த வேண்டும்,'' என்கிறார் தம்பையா.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிக்கிய 6 கோடி ரூபாய் தங்கம்! - அதிரடியில் தேர்தல் பறக்கும் படை 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
6 crores of gold trapped! Election Flying Squad in action
மாதிரி படம் 

சேலம் அருகே, உரிய ஆவணங்களின்றி கூரியர் நிறுவன வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 6.20 கோடி ரூபாய் தங்க நகைகளைத் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், சேலத்தை அடுத்துள்ள மல்லூர் பிரிவு சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரபீக் அஹ்மது தலைமையில் அலுவலர்கள் மார்ச் 23 ஆம் தேதி காலை வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, சேலத்திலிருந்து வந்த தனியார் கூரியர் நிறுவனத்திற்குச் சொந்தமான வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த 3 சாக்கு மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அவற்றில் 39 நகைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. அந்தப் பெட்டிகளில் 6.20 கோடி ரூபாய் மதிப்பிலான 29 கிலோ புதிய தங்க நகைகள் இருந்தன. இந்த நகைகளைக் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

அவற்றை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துராமலிங்கத்திடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், ''பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் சேலத்தில் இருந்து திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகளுக்குக் கொண்டு செல்லப்படுவதற்காக கூரியர் நிறுவனத்தின் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். ஆனாலும் இதற்கான உரிய ஆதாரங்கள் இல்லாததால் நகைகளைப் பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனம், இந்த நகைகளுக்கான ஆதாரங்களைக் காண்பித்துவிட்டு பெற்றுச் செல்லலாம்'' என்றார். 

Next Story

ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...5 சுங்கச்சாவடிகளில் டுவிஸ்ட்!

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
From the first day of April; Twist at 5 toll booths

வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இருக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 5 சுங்கச்சாவடிகளில் குறைந்தபட்சம் 5 ரூபாயில் இருந்து 20 ரூபாய் வரை கட்டண உயர்வு இருக்கும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது.மாதாந்திர கட்டணம் 100 ரூபாயில் இருந்து 400 ரூபாய் வரை உயர இருப்பதாகக் கூறப்படுகிறது. அரியலூர் மாவட்டத்தில் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லாடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தால், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.