final tribute to Pope Francis

கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (வயது 88) கடந்த சில மாதங்களாக நிமோனியா உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாகத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அதே சமயம் வயது முதிர்வு காரணமாக அவருக்குச் சிகிச்சை அளிப்பது மருத்துவத்துறை நிபுணர்களுக்குச் சவாலாக இருந்தது. இருப்பினும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்த போப் பிரான்சிஸ் கடந்த 21ஆம் தேதி (21.04.2025) காலமானார்.

உடல் நலக்குறைவு காரணமாக போப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். 21ஆம் தேதி காலை 07.35 மணியளவில் போப் பிரான்சிஸ் காலமானதாக வாட்டிகன் சிட்டி தகவல் தெரிவித்துள்ளது. போப் பிரான்சிஸ் மறைவு சர்வதேச அளவில் பலரிடமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு உலகம் முழுவதில் இருந்தும் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. அவரது உடலுக்கு உலகம் முழுவதில் இருந்தும் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.

Advertisment

அந்த வகையில் போப் பிரான்சிஸ் உடலுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் மரியாதை செலுத்தினார். தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் ஆகியோர் நேற்று (25.04.2026) அஞ்சலி செலுத்தினர். மேலும் போப்பு பிரான்சிஸுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியாவில் இன்று துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று (26.04.2025) மாலை போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கை கியோவன்னி படிஸ்டா நடத்திக்கொண்டிருக்கிறார். வாடிகன் பேராலயத்தில் போப் பிரான்சிஸ் உடலுக்கு திருப்பலி நடை பெற்றுக்கொண்டுள்ளது.

இதனையடுத்து காசா சாண்டா மார்டாவில் போப் பிரான்சிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்குக் குவிந்துள்ளனர். செயிண்ட பீட்டர்ஸ் சதுக்கத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் குவிந்துள்ளனர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளார்.