புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா திருமயம் தாலுகா கோனாபட்டு அஞ்சல் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கரீம் மகன் ஜகபர் அலி. முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலரான இவர் சமூக ஆர்வலரும் கூட. இவர், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது.
இருப்பினும், நம்பிக்கையோடு, தொடர்ந்து குரல் கொடுத்து வந்திருக்கிறார். அந்த வகையில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி புதுக்கோட்டை கோட்டாட்சியருக்கு கொடுத்துள்ள மனுவில், சில குவாரிகளின் பெயர்களுடன் பல ஆதாரங்களையும் இணைத்து பல நூறு கோடிக்கான கனமவள கொள்ளை நடந்துள்ளது. அதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த 6 பக்க மனுவுடன் பல ஆதாரங்களையும் இணைத்து கொடுத்துள்ளார். இந்த புகாரையடுத்து மீண்டும் 13 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலும் ஒரு புகார் கொடுத்துள்ளார். அப்போது அவர் கூறும் போது, திருமயம் வட்டாட்சியர் புகார் மனுக்கள் குறித்து குவாரிகளுக்கு தகவல் சொன்னதால் கொள்ளையடிக்கப்பட்ட கனமங்களை கிரசர் உரிமையாளர்கள் மீண்டும் குவாரிக்குள் கொட்டி வருகின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் தான் 17 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஜகபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு செல்லும் போது, அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். முதலில் இது எதிர்பாராத விபத்தாக பார்க்கப்பட்டது. ஆனால் இது திட்டமிட்ட கொலை என்று ஜகபர் அலியின் மனைவி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சமூக ஆர்வலர்களும் கொலை என்றே கூறினர்.
அதன் பிறகு நடந்த விசாரனையில் வலையன்வயல் ஆர்.ஆர் கிரசர் உரிமையாளர்கள் ராசு மற்றும் அவரது மகன் தினேஷ் குமார், ராமையா ஆகியோருடன் லாரி சர்வீஸ் முருகானந்தம், மினி லாரி ஓட்டுநர் காசிநாதன் ஆகியோர் சேர்ந்து கூட்டுச் சதி செய்து ஜகபர் அலி மீது மினி லாரியை 2 முறை மோதி கொன்றது அம்பலமானது. இதனையடுத்து ராமையா தவிர மற்ற 4 பேரையும் கைது செய்த போலிசார் தலைமறைவான ராமையாவை தேடி வந்தனர்.
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரனைக்கு மாற்றப்பட்ட நிலையில் நாளை சிபிசிஐடி போலிசார் விசாரனையை தொடங்க உள்ளனர்.இந்த நிலையில் போலிசாரால் தேடப்பட்டு வந்த ராமையா நமணசமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.