Tamil Nadu Students Association condemns IIT director Kamakoti

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள், போகி பண்டிகையுடன் தொடங்கி (13.01.2025) தமிழகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் சென்னை, மேற்கு மாம்பலத்திலுள்ள கோசாலையில் கடந்த 15ஆம் தேதி (15.01.2025) அன்று மாட்டுப்பொங்கல் விழா நடைபெற்றது. இதில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கோமியம் குறித்து அவர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, “கோமியம் சிறந்த மருத்துவ குணத்தைக் கொண்டது. காய்ச்சலைக் குணமாக்கும். பாக்டீரியா பாதிப்பு, பூஞ்சை பாதிப்புகளுக்கு எதிராகக் கோமியம் செயல்படக் கூடியது. மேலும் இது, செரிமான கோளாறு உள்ளிட்ட உடல் பாதிப்புகளை எதிர்க்கும் ஆற்றல் கொண்டது” எனப் பேசியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியின் இந்த கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோமியம் (மாட்டின் சிறுநீர்) குடித்தால் ஜுரம் சரியாகுமென அறிவியலுக்கு புறம்பான கருத்தைப் பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடிக்கு தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னை ஐ.ஐ.டி. இயக்குநரான காமகோடி, கோமியம் குடித்தால் ஜூரம் சரியாகுமென அறிவியலுக்கு எதிரான, ஆதாரங்கள் இல்லாத பிற்போக்கு கருத்தைப் பேசியிருக்கிறார். அறிவியல் படி கோமியம் என்பது மாட்டின் கழிவு. மேலும் ஏற்கனவே நோய்வாய்ப்பட்டிருக்கும் மாடாக இருந்தால் மனிதர்களுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய, நோயைப் பரப்பக்கூடிய நுண்ணுயிரிகள் அந்த மாட்டின் சிறுநீரில் இருக்கும்.

Advertisment

இதை மனிதர்கள் அருந்தினால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல நோய்கள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கும் நிலையில், அறிவியலை ஊக்குவிக்கவேண்டிய இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநர் அறிவியலுக்கு எதிராகப் பேசியிருப்பதைத் தமிழ்நாடு மாணவர் கழகம் கண்டிக்கிறது. மேலும் தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான் பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல் படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.