சிதம்பரம் வட்டார போக்குவரத்துறை அலுவலகம் சார்பில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு துண்டுப் பிரசுரம் வழங்கியும், சாலை விபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எமன் நாடகம் மற்றும் கரகாட்ட நடனம் மேளதாள முழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் கு.அருணாசலம் தலைமை தாங்கினார். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் ரமேஷ் பாபு உள்ளிட்ட போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் உடன் இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் பேருந்துகளை ஆய்வு மேற்கொண்டு அதிக சப்தம் கொண்ட ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தார். போக்குவரத்து வட்டார அலுவலர் அருணாச்சலம் மீண்டும் அதிக சத்தம் எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களிடம் எச்சரிக்கை விடுத்தார். இதே போல் பண்ருட்டி. நெய்வேலி, பெண்ணாடம். விருதாச்சலம், கடலூர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பேருந்து நிலையங்களில் பொது மக்களுக்கும் மற்றும் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.