ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக தெலுங்கில் புஷ்பா 2 படத்தில் இவர் நடித்திருந்த நிலையில் தற்போது ‘தி கேர்ள் ஃபிரண்ட்’(தெலுங்கு) குபேரா(தமிழ் மற்றும் தெலுங்கு) மற்றும் இந்தியில் சிக்கந்தர், சாவா உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் அவருக்கு ஜிம்மில் காயம் ஏற்பட்டதால் ஒரு மாதம் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறியிருந்தார். விரைவில் தான் நடித்து வந்த படங்களில் நடிப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தியில் அவர் நடித்துள்ள சாவா படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. மேடாக் பிலிம்ஸ் தயாரிப்பில் லட்சுமன் உடேகர் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள இப்படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதில் விக்கி கௌஷலுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது. இதற்காக மும்பைக்கு சென்ற ராஷ்மிகா விமான நிலையத்துக்கு வீல் சேரில் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்ட ராஷ்மிகா தனது ஓய்வு குறித்து பேசினார். அவர் பேசியதாவது, “மகாராணி யேசுபாயாக தெற்கு பகுதியில் இருந்து ஒரு பெண் நடிக்க வருவது வாழ்நாளில் கிடைத்த பாக்கியமான விஷயம். அது மரியாதையானதும் கூட. நான் இயக்குநரிடம் இந்தப் படத்திற்குப் பிறகு நான் ஓய்வு பெற்றால் கூட சந்தோஷம் தான் என்றேன்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “நான் பொதுவாக அழக் கூடிய ஆள் கிடையாது. ஆனால் இந்தப் படத்தின் ட்ரைலர் என்னை அழவைத்து விட்டது” என்றார்.