
திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்குள் ஜீலை 11ந்தேதி மாலை 4.20 மணியளவில் திருவண்ணாமலை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையின் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார், காவல் ஆய்வாளர்கள் ரஜினிகாந்த், அருள்பிரசாத் என 12 பேர் கொண்ட குழு புகுந்துள்ளது.
அப்போது அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவழகன், மண்டல வட்டார போக்குவரத்து கழகத்தின் விழுப்புரத்தை சேர்ந்த பறக்கும்படை அதிகாரி துரைசாமி இருந்துள்ளார் மற்றும் ஊழியர்கள் இருந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி வாகனங்கள் வாரந்தோறும் புதன்கிழமை ஆய்வு நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் பெருமளவில் லஞ்சம் விளையாடியுள்ளது. அதேப்போல் அலுவலகம் முழுவதுமே புரோக்கர்கள் ராஜ்ஜியம் கொடிக்கட்டி பறந்துள்ளது. இதனை லுங்கி கட்டிக்கொண்டு லாரி டிரைவர் போல் லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்த ஒருவர் வந்து உட்கார்ந்து நோட்டமிட்டு மேலிடத்துக்கு தகவல் தந்துள்ளார்.
அதன்பின்பே அதிகாரிகள் ரெய்டு என உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த லாரிகள், அலுவலகத்தின் பின்புறம், பாத்ரூம் என எல்லா இடத்திலும் சோதனை செய்தபோது, பறக்கும்படை ஆர்.டீ.ஓ துரைசாமி காரில் இருந்து 50 ஆயிரம் ரூபாயும், அலுவலகத்தில் இருந்து 25 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அந்த பணத்துக்கான விளக்கத்தை நீண்ட நேரம் கேட்டுள்ளனர்.

அதோடு, அதிகாரிகளுக்கு புரோக்கர்களாக செயல்படும் சில தனியார் ஓட்டுநர் பயிற்சி மைய உரிமையாளர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இரவு 9 மணியளவில் வழக்கு பதிவு செய்து, பறிமுதல் செய்த பணத்தை நீதிமன்றம் மூலம் அரசுக்கணக்கில் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.