கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இன்று (23/01/2022) தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் இன்றும் அனுமதிக்கப்படும். முழு ஊரடங்கின் போது ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகளுக்கு தடை தொடரும் என அரசு அறிவித்துள்ளது.
முழு ஊரடங்கு நாளில் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்யப்படும் வாடகை கார்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு போன்ற இடங்களில் இருந்து வாடகை கார்களை இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரயில் நிலையங்கள் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும்.
முழு ஊரடங்கான இன்று ஆம்னி பேருந்துகள் இயங்காது என்று அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எனினும், நாளை (24/01/2022) வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இன்று (23/01/2022) டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.