Skip to main content

ராகுலை தோற்கடித்த காங்கிரஸ் கார்ப்பரேட்கள்! - காங். நிர்வாகி காரசார கடிதம்

Published on 01/06/2019 | Edited on 01/06/2019

 

இந்தியாவின் 16வது நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதில் காங்கிரஸ் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியமைக்கும் என பலதரப்பிலும் நம்பினர். ஆனால் தனிப்பெரும் பலத்துடன் பாஜக வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்றுள்ளார். காங்கிரஸ் எதிர்கட்சி அந்தஸ்தை இந்த முறையும் பறிக்கொடுத்துள்ளது.

 

இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, அகில இந்திய தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் என ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி செயற்குழு கூட்டத்தில் கூறியுள்ளார். இதனை காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதே மனநிலை தான் காங்கிரஸ் தொண்டர்களிடம் எதிரொலிக்கிறது. 

 

r

 

இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை பிரிவு தலைவர் அஸ்லம்பாஷா கட்சி தலைமைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், ’’இந்தியாவின் மாபெரும் ஐந்து அடையாளம்

1.கௌதம புத்தர்
2.மகாத்மா காந்தியின் அகிம்சை
3.இந்திய அரசியல் சாசனத்தின் மதசார்பின்மை
4.வேற்றுமையில் ஒற்றுமை
5.இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு

உலகநாடுகள் போற்றுகின்ற இந்தஅடையாளங்களை அழித்துவிட்டு சனதான தர்மத்தை நிலைநாட்ட, இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து விட்டு, ஒரே நாடு, ஒரே மதம், ஒரே பண்பாடு, ஒரே கலாச்சாரம் என்கிற ஒற்றை பாசிசத்தை நோக்கி பாஜக பயணிக்கிறது. அதைதடுத்து நிறுத்தும் மாபெரும் பொறுப்பும் கடமையும் ராகுல்காந்திக்கு மட்டும்தான் உண்டு என்பதை ராகுல் உணரும் நேரம் இது.

 

மூன்றாயிரம் கோடியில் பட்டேல் சிலை, பணமதிப்பிழப்பு நடவடிக்கை காங்கிரஸ்சின் ஐந்தாண்டு திட்டம், பஞ்சாயத்து ராஜ் என்ற கிராம ஊராட்சி அதிகாரம் இவற்றை அப்படியே பெயர் மாற்றம் செய்து, ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் பெயரில் திட்டங்களை அறிவிப்பது, காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவது என்ற பெயரால் காங்கிரஸ் வென்றால் இந்துமதம் அழிந்து போகும் என அச்சமூட்டுவது, சிவசேனா போன்ற கட்சிகளை தேசிய அளவில் உருவாக்கி  தேர்தலை சிவசேனா - பாஜக இடையிலான போட்டியாக மாற்றுவது. இந்த பாசிச திட்டத்தை அமல் படுத்தத்தான் கூட்டணி மந்திரிசபை என்ற பெயரில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகிறது. ராம்விலாஸ் பாஸ்வானை அருகில் வைத்துக்கொண்டே தலித்துகளை ஒடுக்குவது, முக்தார் அப்பாஸ் மறைந்த அப்துல்கலாம் நினைவை வைத்துக்கொண்டு இஸ்லாமியர்களை ஒடுக்குவது என்ற நுட்பமான ஹிட்லர் கடைபிடித்த அதே திட்டத்தை கையில் எடுக்கிறது பாஜக. 

 

800 ஆண்டுகள் முகலாயர்கள் ஆண்டபோது அழியாத இந்து மதம், 300 ஆண்டுகள் இங்கிலாந்து ஆண்டபோது அழியாத இந்து மதம், காங்கிரஸ் ஆண்டால் அழிந்து விடும் என அச்சமுட்டுவது எவ்வளவு பெரிய பாசிசம் என்பதை ராகுல் உணரவேண்டும். இந்த தேர்தல் காங்கிரஸ்க்கும் பாஜகவுக்கும் இடையே நடந்த தேர்தல் அல்ல. அச்சத்திற்கும் அராஜகத்திற்கும் இடையே நடந்த தேர்தல்.

 

இந்த தேர்தலை கார்ப்பரேட் கம்பெனிகள் தான் நடத்தின என்பதற்கு ஒரு உதாரணம் எக்சிட் போலில் பாஜக வெற்றி பெரும் என்ற செய்தி வந்ததும் பங்குச்சந்தையின் அசுர வேகத்தில் ஏற்றம் கண்டது. பல லட்சம் கோடி லாபம் சம்பாதித்தது. 1991 ல் ராஜிவ்காந்தி படுகொலைக்கு பிறகு திறந்து விடப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் போன்றவற்றை ராகுல் வெற்றி பெற்றால் அவை தடுத்து நிறுத்தப்படும் என்ற அச்சமே ராகுலை வீழ்ச்சி அடைய வைத்துள்ளது கார்ப்பரேட் கம்பெனிகள். 

 

காங்கிரஸ் ஜவகர்லால் நேருவின் பாரம்பரிய பண்புகளை ஒட்டி இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி வழியில் காங்கிரஸ் பயணிக்க தொடங்கினால் தங்களுக்கு அது பெறும் ஆபத்தாக முடியும் என்று அஞ்சுகின்றனர் கார்ப்பரேட்டுகள். அதனால், நேரு வம்சாவளி தலைமையை ஏற்க மறுக்கிறார்கள். ஆகவே தொடர்ந்து தோல்வியை கொடுத்து நேரு குடும்பத்தை தனிமைப்படுத்த முயற்சி செய்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் மறைந்த ராஜிவ்காந்தி மீது மோடி அவதூறு பரப்பியது. ஒரு கார்பரேட் அடிமைக்கும் ஒரு சுதேசி தலைவருக்கும் இடையிலான மோதலில் காங்கிரஸ்சில் உள்ள கார்ப்பரேட் அடிமைகளே காங்கிரஸை தோற்கடித்தார்கள். இது 1977ல் இந்திராவிற்கு நேர்ந்தது. அந்த கார்ப்பரேட் மாபியாக்கள் காங்கிரஸ்சின் இதர தலைமைகளை ஏற்பார்கள். நேரு குடும்ப வம்சாவளியை ஏற்கமாட்டார்கள். 

 

இந்திராகாந்தியின் 20 அம்சத்திட்டத்தை காங்கிரஸ்காரர்களே தோற்கடித்தார்கள். இந்த வரலாற்று உண்மைகளை எல்லாம் ஆய்வு செய்து மீண்டும் பலமடங்கு வலிமையோடு காங்கிரஸ்க்கு ராகுல் தலைமை தாங்க வேண்டும். இந்திய வரலாறு உங்கள் முன் வைக்கும் மிக முக்கியமான கேள்வி. நேரு அறிவித்த இந்திய சோசலிச குடியரசு நீடிக்க வேண்டுமா? இந்திரா உருவாக்கிய மதசார்பற்ற குடியரசு நீடிக்க வேண்டுமா? இளம் தலைவர் ராஜிவ் உருவாக்கிய, நாட்டின் கடைசி மனிதனுக்கும் அதிகாரம் என்ற பஞ்சாயத்ராஜ் இந்தியா நீடிக்க வேண்டும் என்றால் ராகுல் நீங்கள் காங்கிரஸ் தலைவராக நீடிக்க வேண்டும். 

 

மேலே கூறியவற்றை தகர்க்க பாசிச சக்திகள் இந்திய விடுதலையை காட்டிக்கொடுத்த சக்திகள் கங்கணம் கட்டி வேலை செய்கிறது. காங்கிரஸ் தோற்கலாம், ராகுல் தோற்கலாம், நேரு கட்டி எழுப்பிய இந்திய வரலாறு தோற்றுவிடக்கூடாது.’’


 

சார்ந்த செய்திகள்