
கஜா புயல் கோரதாண்டவம்...
பாட்டன், பாட்டி வைச்ச மரம்...
பரம்பரையா வந்த மரம்...
அப்பன், ஆத்தா நட்ட மரம்...
ஆதரவா நின்ன மரம்...
நான் பாத்து வச்ச மரம்...
நல்லப்படி காய்ச்ச மரம்...
புள்ளக்குட்டி படிப்புக்கு...
பூத்த மரம்... காய்ச்ச மரம்...
வேரோட சாஞ்ச்சு கிடக்குதே... அய்யய்யோ...
எங்க விவசாயம் பாழா போச்சுதே...
ஒரு நாள் அடிச்ச புயலில்...
ஊரே அழிஞ்சிடுச்சே...
கூரை வீடு... ஓட்டு வீடு...
குடும்பம் காத்த ஆடு, மாடு...
எல்லாமும அழிஞ்சுபோச்சுதே... அய்யய்யோ...
எங்க ஏழை வாழ்க்கை சோகமாச்சுதே...

கஜா புயல் கோரதாண்டவம்...
குடிக்க நல்ல தண்ணி இல்ல...
குடியிருக்க வீடுமில்ல...
படுக்க ஒரு பாயுமில்ல...
பார்க்க ஒரு நாதியில்ல...
மின்சாரம், தொலைபேசி எதுவுமே இயங்கவில்ல...
சம்சாரம், புள்ளைகளுக்கு சாப்பாடு கிடைக்கவில்ல...
கஞ்சிக்கே வழியுமில்ல... கண்துடைப்பார் யாருமில்ல...
கெஞ்சினாலும், அழுதாலும் கேட்க ஒரு நாதியில்ல...

கஜா புயல் கோரதாண்டவம்...
வேதாரண்யம் தீவு போல விடுவிட்டுபோச்சுதய்யோ...
வேதனையை சொல்லி அழ நெஞ்சுக்குழி அடைக்குதய்யா...
நான் பிறந்த புஷ்பவனம் சின்னாபின்னாமாச்சுதய்யா...
பசுமையாக இருந்த ஊரு வெட்டவெளியாச்சுதய்யா...
வேதனையை தீர்த்து வைக்க வேதாரண்யம் வந்துடுங்கோ...
விம்மி அழும் ஏழை முகம் பார்த்து ஆறுதல் சொல்லுங்கோ...
உங்களை கைக்கூப்பி உதவி கேட்கின்றோம்...
ஏழைக்கு கை கொடுக்க இந்தப் பக்கம் வந்திடுங்க...
ஏதேனும் செஞ்சிடுங்க...