Skip to main content

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்; 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published on 27/08/2018 | Edited on 28/08/2018
m

    

மாங்காடு கிராமத்தில் பொதுமக்களின் எதிர்ப்புகளையும் மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலைமறியல் செய்தனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 

    புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு கிராமத்தில் பூச்சிகடை கடைவீதியில் இருந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்ட நிலையில் வேறு இடத்தில் டாஸ்மாக் கடை திறக்க கூடாது என்று கிராம மக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் பல முறை மனு கொடுத்தனர். 
    இந்த நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியுள்ளது. இந்த தகவல் அறிந்த கிராம மக்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளனர். 


    கிராம மக்கள் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று பல முறை கோரிக்கை மனு கொடுத்த பிறகும் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்தும் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் முன்னால் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வராஜ் தலைமையில் திரண்ட பொதுமக்கள் பூச்சிகடை கடைவீதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் புதுக்கோட்டை- பட்டுக்கோட்டை – பேராவூரணி செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்களை முத்துமாரியம்மன் கோயில் நுழைவாயில் சாலையில் மாற்றி நகரம் கீரமங்கலம் வழியாக போக்குவரத்து மாற்றப்பட்டது. வடகாடு போலிஸ் இன்ஸ்பெக்டர் (பொ) பாலசுப்பிரமணியன் தலைமையில் 50 க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டனர்.


    ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு தொடங்கிய சாலை மறியல் போராட்டம் 12 மணி வரை நீடித்தது. சாலை மறியலின் போது.. டாஸ்மாக் கடை மாங்காடு ஊராட்சிக்கு வேண்டாம் என்று முழக்கமிட்டனர். மேலும் மாங்காடு ஊராட்சி எல்லைக்குள் அதிகமான விபத்துக்கள் நடக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்ட விபத்துகள் எற்பட்டு 3 பேர் இறந்துள்ளனர். 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடை வந்தால் விபத்துகள் அதிகரிக்கும். அதனால் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று பெண்கள் கோரிக்கை வைத்தனர்.


    சாலை மறியல் நடந்த இடத்திற்கு வந்த ஆலங்குடி வட்டாட்சியர் ரெத்தினாவதி மற்றம் வடகாடு இன்ஸ்பெக்டர் (பொ) பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மேலும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடத்தப்படும் அதுவரை டாஸ்மாக் கடை திறக்கப்படமாட்டாது என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது. 
                


 

சார்ந்த செய்திகள்