Skip to main content

சிறுமிக்கு பாலியல் கொடுமை; இளைஞர்களுக்கு சாகும் வரை சிறை 

Published on 28/10/2023 | Edited on 28/10/2023

 

prison for life time vilupuram court order

 

விழுப்புரம் மாவட்டம், கெடார் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2020 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி இயற்கை உபாதை கழிப்பதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டத்துப் பக்கம் சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(25), சுபாஷ்(24), மற்றொரு சுபாஷ்(26) ஆகிய  மூன்று வாலிபர்களும் அந்தப் பகுதிக்கு ஒரு காரில் வந்துள்ளனர். மேலும், அந்த சிறுமியிடம் புதிதாக சுடிதார் வாங்கி வந்துள்ளதாகவும், அதனைத் தருவதாகவும் அழைத்துள்ளனர். ஆனால், சிறுமி மறுத்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். 

 

மூவரும் அந்தச் சிறுமியை வலுக்கட்டாயமாகக் காருக்குள் தூக்கிச் சென்று மூவரும் பாலியல் வன்கொடுமை செய்தனர். நிலைதடுமாறி அந்தச் சிறுமி வீட்டிற்குச் சென்று தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பதறிப்போன பெற்றோர்கள் இது குறித்து செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மகளிர் காவல் நிலைய போலீசார் விக்னேஷ் மற்றும் இரண்டு சுபாஷ் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

 

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்து வழக்கறிஞர்கள் விவாதம் முடிவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் நீதிபதி ஹெர்மிஸ் தீர்ப்பளித்தார். அந்தத் தீர்ப்பில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களும் சாகும் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அதோடு அவர்கள் மூவருக்கும் தலா 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது எனத் தீர்ப்பளித்தார். 

 

அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசுத் தரப்பில் ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.  தண்டனை விதிக்கப்பட்ட மூன்று இளைஞர்களையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் சிறைச் சாலைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்