Skip to main content

மாணவி ப்ரதீபா மரணம்: அஞ்சலி செலுத்த வந்த ஆட்சியர் மீது கோபமடைந்த பொதுமக்கள்!

Published on 06/06/2018 | Edited on 06/06/2018
coll


நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்து உயிரிழந்த மாணவி ப்ரதீபா உடலுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் விழுப்புரத்தைச் சேர்ந்த மாணவி பிரதீபா தற்கொலை செய்துகொண்டார். கூலித் தொழிலாளியின் மகளான பிரதீபா 12 ஆம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 155 சதவீத மதிப்பெண்கள் எடுத்த பிரதீபாவுக்கு தனியார் மருத்துவக்கல்லூரியில் தான் சேருவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. தனியார் கல்லூரியில் சேரும் அளவிற்கு தனது பெற்றோர்களிடம் பணம் இல்லாத காரணத்தால் அப்போது மருத்து படிப்பில் சேரவில்லை.
 

dea


தொடர்ந்து மனதைரியத்துடன் நீட் தேர்வுக்கான வகுப்புகளுக்கு சென்று இந்த ஆண்டு நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்நிலையில் வந்த நீட் தேர்வு முடிவில் அவர் 39 சதவீத மதிப்பெண்கள் மட்டுமே பெற முடிந்தது. அந்த விரக்தியில் மனமுடைந்த அவர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த மாணவி ப்ரதீபா உடலுக்கு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் ப்ரதீபாவின் அப்பா சண்மூகம், அக்கா உமா ப்ரியா இருவரிடமும் ஆறுதல் வார்த்தை கூறிய அவர், உங்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் என்னை வந்து சந்தியுங்கள். நான் செய்ய தயாராக உள்ளேன் என்றார். அத்துடன் ப்ரதீபா தந்தை சண்மூகம் செய்யும் வேலை குறித்தும் கேட்டு அறிந்துகொண்ட அவர் அரசாங்கம் ரூ.7 லட்சம் நீதியுதவி அறிவித்துள்ளது அதனை அமைச்சர்கள் நேரில் வந்து வழங்குவார்கள் என கூறினார்.

அதன் பின் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்ற ஆட்சியர் சுப்பிரமணியன் அங்கிருந்த எம்.எல்.ஏ., மஸ்தானை சந்தித்து பேசினார். அவரிடம் சட்டமன்றம் நடப்பதால் ப்ரதீபா உடலுக்கு அஞ்சலி செலுத்த அமைச்சர்களால் நேரில் வரமுடியவில்லை. சட்டமன்றம் முடிந்ததும் இந்த வார இறுதியில் வருகிறோம் என அமைச்சர்கள் கூறியுள்ளனர். அப்போது அவர்கள் வரும் போது அரசாங்கம் அறிவித்த நிதியுதவியை அமைச்சர்கள் வழங்குவர் என தெரிவித்தார். மேலும் கட்டிட தொழிலாளியாக உள்ள ப்ரதீபா தந்தைக்கு தொழிற்கடன் உதவி பெற்று தர நடவடிக்கை எடுக்கிறேன் என ஆட்சியர் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.
 

poli


இதைத்தொடர்ந்து, காத்திருப்பு போராட்டம் எப்போது முடியும் என ஆட்சியர் சுப்பிரமணியன் போராட்டகாரர்களிடம் கேட்டபோது, அஞ்சலி செலுத்த தலைவர்கள் வந்து சென்று கொண்டிருக்கிறார்கள் அவர்கள் வந்து சென்ற பின் இறுதி நிகழ்வு நடைபெறும் என்று கூறினர். அத்துடன் எம்.எல்.ஏ., மஸ்தான் காத்திருப்பு போராட்டம் குறித்து அரசாங்கத்திற்கு ஆட்சியர் சார்பில் அறிக்கை வாயிலாக தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

ஆட்சியர் வந்து சென்ற பின் கூட்டத்தில் இருந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அஞ்சலி செலுத்த வந்தாரா? அல்லது அமைச்சர்கள் எப்போது வருவார்கள் என்பதை தெரிவிக்க வந்தாரா என ஆத்திரமடைந்தனர். ஏனெனில் சட்டப்பேரவை நடப்பதால் அமைச்சர்கள் வர முடியவில்லை என்பதை 4 முறை திரும்ப, திரும்ப அனைவரிடமும் கூறியுள்ளார்.

சார்ந்த செய்திகள்