Skip to main content

நடைபாதை ஆக்கிரமிப்பு கோவில் இடிக்கப்படும்! - உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு உறுதி!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

சென்னை மாநகர் முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

Platform temple will be demolished says government officials


சென்னை மாநகரில் நடைப்பாதைகளை முறையாக பராமரிக்க கோரிய வழக்கில், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மாநகராட்சி ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி நீதிபதிகள் சத்திய நாராயணன், சேசஷாயி அடங்கிய அமர்வு முன்பு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆஜரானார். அப்போது அவர், தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகள் அடையாளம் காணப்பட்டு 40 ஆயிரம் நடைபாதை வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

அதுபோல், எந்தெந்த பகுதிகளில் வியாபாரம் செய்ய முழு நேரமும் அனுமதி, எங்கு பகுதி நேர அனுமதி, எங்கு அனுமதியில்லை என்பது குறித்து திட்டம் வகுத்து வருகிறோம். ஓராண்டு காலத்திற்குள் இத்திட்டம் முழுவதுமாக நடைமுறைபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

சென்னை பாண்டி பஜாரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையில் வாகன நிறுத்தம் மற்றும் நடைபாதை வியாபாரம் செய்வதை தடுக்க தனியார் நிறுவனத்துடன் 5 ஆண்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.சென்னையில் 11 லட்சம் நான்கு சக்கர வாகனங்ககும், 54 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உள்ள நிலையில், அதைக் கணக்கில் கொண்டு 65 வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு 550 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


உயர்நீதிமன்றத்திற்கு எதிரே என்.எஸ்.சி போஸ் சாலையில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கோவில் வரும் வெள்ளிக் கிழமைக்குள் இடிக்கப்படும் என்று உறுதியளித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சியும் போக்குவரத்து காவல்துறையும் இணைந்து சென்னை முழுவதும் நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்து அதன் விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

மேலும், தமிழ்நாடு நடைபாதை வியாபாரிகள் சட்டப்படி சென்னை முழுவதுமுள்ள  15 மண்டலங்களிலும் நடைபாதை வியாபாரிகளைக் கணக்கெடுத்தது தொடர்பாக கூடுதல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர்  18-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

 

சார்ந்த செய்திகள்