Skip to main content

‘மனு அளிக்கலாம்... தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபடக் கூடாது’ - மாவட்ட காவல்துறை எச்சரிக்கை! 

Published on 22/12/2021 | Edited on 22/12/2021

 

‘Petition can be filed ... Do not engage in arson attempt’ - Police warning

 

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு முன்பு நேற்று (21.12.2021) சிறு குழந்தையுடன் வந்த தம்பதி, தங்கள் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொள்ள முயற்சித்தபோது பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில், செஞ்சி அருகே உள்ள நாகலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பிரபு, அந்த ஊராட்சிக்கு உட்பட்ட ஏரியில் மீன் பிடிப்பதற்காக குத்தகை உரிமம் எடுத்துள்ளார். கரோனா அதிகரித்ததால் மீன் பிடிக்க முடியவில்லை என்றும் இதுகுறித்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அது நடைமுறையில் உள்ளதாக கூறுகின்றனர்.

 

இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி இவர் குத்தகைக்கு எடுத்த அதே ஏரி பகுதியில் சிலர் திருட்டுத்தனமாக மீன்களைப் பிடித்துள்ளனர். அவர்களை பிரபு கண்டித்துள்ளார். இதனால் கோபமுற்ற அந்த நபர்கள் பிரபுவுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பிரபு நல்லான்பிள்ளைபெற்றாள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரது புகாரின் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்த பிரபு, அவரது மனைவி ஷாலினி, குழந்தை வைஷ்ணவி ஆகிய மூவரும் தீக்குளிக்க முயன்றுள்ளனர்.  அப்போது பாதுகாப்புக்கு நின்றிருந்த காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.

 

விசாரணையில் மேற்படி தகவலைக் கூறியுள்ளார் பிரபு. பின்னர் அவரிடம் அங்கிருந்த காவல் அதிகாரிகள் புகார் மனு ஒன்றைப் பெற்றுள்ளனர். இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளனர். மேலும், தற்கொலை முயற்சி, மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய மிக எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருட்களைக் கொண்டுவந்தது என இரண்டு பிரிவுகளின் கீழ் அந்த தம்பதிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்து காவல் நிலையங்களில் புகார் கொடுக்க வேண்டும். அங்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் மாவட்ட காவல்துறை அலுவலகத்திற்கு வந்து மேல்முறையீட்டு புகார் மனு அளிக்கலாம். அதை தவிர்த்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் யாரும் ஈடுபடக் கூடாது. அப்படி முயற்சி செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்