
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழில் கொண்டு வராததால் திமுக அரசு தமிழர்களுக்கு எதிரானது’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார். இந்த கருத்தை எக்ஸ் சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் திமுக வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “பொய், பொய், பொய் - பாஜகவிடம் அவ்வளவுதான். இந்த முட்டாள்தனத்தை உண்மைகளுடன் உடைப்போம். கடந்த 2010ஆம் ஆண்டும் முதல், அண்ணா பல்கலைக்கழகம் சிவில் மற்றும் இயந்திர பொறியியலில் தமிழ் மொழியில் பொறியியல் படிப்புகளை வழங்கி வருகிறது. இதை யார் சாத்தியமாக்கினார்கள்? என்றால் அப்போதைய திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான மறைந்த,கலைஞர் ஆவார். தமிழின் உண்மையான ஜோதியை ஏந்தியவர் ஆவார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில், தமிழில் மருத்துவக் கல்வி ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில், ஒரு வருடத்திற்கும் மேலாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகம் (TNTBESC), மாணவர்களுக்கான கிரேயின் உடற்கூறியல் மற்றும் மருத்துவ உடலியல் கைட்டன் மற்றும் ஹால் பாடநூல் போன்ற முக்கிய மருத்துவப் பாடப்புத்தகங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டது. இளநிலை மருத்துவ மாணவர்களுக்காக மொத்தம் 13 தமிழ் புத்தகங்களை 50 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட குழு உருவாக்கி வருகிறது. தமிழ் அடையாளத்தை அழிக்க விரும்புவது பாஜக தான். அதனால்தான் இறந்த மொழியான சமஸ்கிருதத்திற்கு நூற்றுக்கணக்கான கோடி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழுக்கு எந்த நிதியும் வழங்கவில்லை.
இதற்கிடையில், தமிழ் தளங்களில் தொல்பொருள் ஆய்வுக்கு நிதியுதவி செய்வது திமுக அரசுதான். அதே நேரத்தில் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் புகழ்பெற்ற வரலாற்றை கவனத்திற்குக் கொண்டுவருவதற்காக பண்டைய தளங்களில் உள்ள கல்வெட்டுகளைப் புரிந்துகொள்வதற்கு ஒரு மில்லியன் டாலர் பரிசு வழங்குகிறது. மக்கள் புத்திசாலிகளாகிவிட்டார்கள். பாஜக மற்றும் அதன் தலைவர்களின் வெட்கமற்ற அப்பட்டமான பொய்களை மக்கள் புரிந்துகொள்கிறார்கள். பாஜகவின் தமிழர் விரோத பிரச்சாரம் பெரியார், அண்ணா மற்றும் கலைஞர் ஆகியோரின் மண்ணில் வேலை செய்யாது.

கடந்த1965 ஆம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிராக தமிழக மக்கள் எப்படிக் கிளர்ந்தெழுந்தார்களோ, அதைப் போலவே, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினின் ஆதரவுடன் இதையும் எதிர்க்கத் தயங்க மாட்டார்கள். அவர் முன்னணியில் இருந்து தமிழுக்கு எதிரான எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராகப் போராடுவார். நமது வளமான பாரம்பரியத்தையும் துடிப்பான கலாச்சாரத்தையும் பாதுகாக்க, என்ன நடந்தாலும் போராடுவார்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மருத்துவகல்விக்கான தமிழ்வழி புத்தகங்கள் தொடர்பாக வெளியான செய்திகளும் இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.