
வெளிநாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானங்களில் வரும் பயணிகளில் சிலர் தங்கம் கடத்திவருவது அதிகரித்துவருகிறது. குறிப்பாக சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தரகர்கள் மூலம் அதிகளவு கடத்தப்படுகிறது. அந்த கடத்தலுக்கு சுங்கத்துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டது. அந்த வகையில், கடந்த மாதம் தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தர்மேந்திரா எனும் ஆய்வாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் இரண்டு நாட்களில் 20 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கு உறுதுணையாக இருந்த சுங்கத்துறை ஆய்வாளர் ஒருவர் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட, மற்றொரு அதிகாரியை விடுப்பில் செல்லுமாறு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரும் விமான நிலையத்தில் இருந்து விடுவிக்கப்படும் நிலையில் இருந்துவருகிறார். இதன் காரணமாக தங்கம் கடத்தல் குறைந்திருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் தங்க கடத்தல் அதிகரித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுங்கத்துறை ஆணையர் அனில்குமார், நேரடியாக களத்தில் இறங்கி சுங்கத்துறை ஆய்வாளர்கள் சோதனை செய்வதைப் பார்வையிட்டார்.
இந்த நிலையில் சுங்கத்துறை இணை ஆணையர் வெளியிட்ட அறிக்கையில், விமான நிலையத்தில் 8 கண்காணிப்பாளர்கள் மற்றும் 8 ஆய்வாளர்கள் என மொத்தம் 16 பேர் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாகவும் அவர்கள் விரைவில் பதவியேற்க இருப்பதாகவும் தெரியவருகிறது. இதன் மூலம் ஏற்கனவே அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வேறு பணிகளுக்குக் கூண்டோடு மாற்றம் செய்யப்பட உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.