Skip to main content

என்.ஐ.ஏ. அதிரடி சோதனை; தஞ்சையில் இருவர் கைது!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
NIA Action Test Two arrested in Tanjore

தமிழகத்தில் சென்னை, கும்பகோணம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட 12 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். ‘ஹிஸ்புத் உத் தஹீரிர்’ என்ற தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவோர் வீடுகளில் சோதனை நடைபெற்றதாகக் கூறப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டையில் மாத்தூரில் உள்ள அப்துல்கான் என்பவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு மற்றும் உதவி புரிதல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு வெளிவரும் எனத் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதே போன்று சென்னையில் தாம்பரம் அடுத்துள்ள முடிச்சூர் பகுதியில் உள்ள ஹமீத் அக்பர் அகமது என்பவர் வீட்டில் சோதனை நடைபெற்றது. மேலும் ஈரோட்டில் நடைபெற்ற சோதனையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. சென்னை பட்டினப்பாக்கம் பகுதியில் சோதனையில் ஈடுபட்ட போது ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் அந்த நபரை ஒப்படைத்துவிட்டு கொளத்தூர் பகுதிக்கு விசாரணைக்குச் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த சோதனைகளில் பென்டிரைவ், செல்போன் உள்ளிட்ட ஆவணங்கள் பலரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. 

NIA Action Test Two arrested in Tanjore

இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் குழந்தை அம்மாள் நகரில் என்.ஐ.ஏ. அமைப்பின் டி.எஸ்.பி. ராஜன் தலைமையில் ஒரு குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். மானாந்துறையில் உள்ள ஷேக் அலாவுதீன் என்பவர் வீட்டில் என்.ஐ.ஏ. அமைப்பின் ஆய்வாளர் அருண் மகேஷ் தலைமையில் மற்றொரு குழுவினர் சோதனை நடத்தினர். அதே போன்று சாலியமங்கலத்தில் முஜிபூர் ரகுமான், அப்துல் காதர் இருவரின் வீட்டில் என்.ஐ.ஏ. அமைப்பின் ஏ.டி.எஸ்.பி. நாகராஜன் தலைமையில் மொத்தம் நான்கு குழுவினர் நான்கு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இன்று (30.06.2024) காலை 6:00 மணி முதல் 11 மணி வரை இந்த சோதனை நடைபெற்றது.

இந்த சோதனையில் பென்டிரைவ், லேப்டாப், செல்போன், சிம்கார்டுகள் உட்பட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதனையடுத்து முஜிபூர் ரகுமான் அப்துல் ரகுமான் ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட ஹிஸ்புத் உத் தஹீரிர் இயக்கத்துக்கு ஆள் சேர்த்ததாகக் கூறி 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

'அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பு'-பெண் தூய்மைப் பணியாளர்கள் தர்ணா

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'Refusal to board government bus'-women sanitation workers dharna

தஞ்சையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளர்களை அரசு பேருந்தில் ஏற்ற மறுப்பதாக 50க்கும் மேற்பட்ட பெண் தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக பெண்களுக்கான கட்டணமில்லா பேருந்துகளில் தூய்மைப் பெண் பணியாளர்கள் என்று ஏற முயன்ற நிலையில் பேருந்து நடத்துனர்கள் பேருந்தில் ஏற்ற மறுப்பு தெரிவிப்பதோடு, அலைக்கழிப்புக்கு ஆளாக்குவதாகவும் புகார்கள் எழுந்தது. இந்நிலையில் அலைக்கழிப்புக்கு ஆளான பெண்கள் தஞ்சை பழைய பேருந்து நிலையத்தின் சாலையில் அமர்ந்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள்  பேச்சுவார்த்தை நடத்தி மாற்றுப் பேருந்து மற்றும் ஆம்புலன்சில் பெண் பணியாளர்களை பணிக்கு அனுப்பி வைத்தனர்.

'Refusal to board government bus'-women sanitation workers dharna

இதில் பாதிக்கப்பட்ட பெண் தூய்மையாளர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''நாங்கள் 7:00 மணிக்கு டூட்டிக்கு போகணும். ஆபீசில் சொன்னாலும் இது குறித்து நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்கிறார்கள். 7:15 மணிக்குத்தான் பஸ் எடுக்க வேண்டும் என கலெக்டர் சொல்லி இருக்காருன்னு சொல்கிறார்கள். அதான் கலெக்டர் வரட்டும் என நாங்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினோம். எங்களுடைய மேனேஜர் வந்து பேச்சுவார்த்தை நடத்தியதால் நாங்கள் இப்பொழுது போகிறோம். பஸ்ஸை நிப்பாட்ட சொன்னாலும் எந்த பஸ் ஸ்டாப்பிலும் நிப்பாட்டுவது கிடையாது. நாயை விடக் கேவலமாக நினைக்கிறார்கள்'' என ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

கமகமக்கும் கறிசோறு உடன் தொடங்கியது மொய் விருந்து!

Published on 30/06/2024 | Edited on 30/06/2024
Moi feast started with Kamagamakum curry

‘மொய் விருந்து’ இந்த வார்த்தை புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் பிரபலமான வார்த்தை. பலருக்கான வாழ்வாதராம். சாதி, மதம், ஏழை, பணக்காரன், முதலாளி, தொழிலாளி, ஆசிரியர், அரசு ஊழியர், அரசியல்வாதி என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரு கலாச்சார விழாவாக இந்த மொய் விருந்துகள் நடத்தப்படுகிறது.

இது தமிழர்களின் வீடுகளில் எந்த ஒரு விழாவாக இருந்தாலும் விழா செலவுகளைச் சமாளிக்க உறவினர்கள் தங்களால் இயன்ற தொகையை மொய்யாக எழுதிச் சென்றுள்ளனர். ஆனால், தஞ்சை  மாவட்டம் பேராவூரணி பகுதியில் கடந்த 35, 40 வருடங்களுக்கு முன்பு சிலர் மொய் விருந்து என்று தனியாக அழைப்பிதழ் அச்சடித்துக் கொடுத்து விருந்து நடத்தி மொய் வசூல் செய்தனர். அந்தப் பகுதியில் உறவினர்களாக இருந்த புதுக்கோட்டை மாவட்டக் கிராமங்களிலும் அந்தப் பழக்கம் பற்றிக் கொள்ள அதன் பிறகு கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களிலும் தொடங்கியது. இந்த மொய் விருந்துகளால் பலரது பொருளாதாரம் உயர்வுக்கும் வழி வகுக்கிறது. மேலும் ஒவ்வொரு குடும்பத்திலும் பட்டதாரிகளை உருவாக்கியது. 

Moi feast started with Kamagamakum curry

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆடியிலும் தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் ஆவணியிலும் மொய் விருந்துகள் நடப்பது வழக்கம். ஆனால் கஜா புயல், கொரோனா பாதிப்புகள் மொய் விருந்துகளையும் ஆட்டிப் பார்த்ததால் பருவம் தப்பிய மொய் விருந்துகள் நடத்தப்பட்டது. அதனால் வழக்கமாக ஆடியில் தொடங்கும் மொய் விருந்துகள் ஆனி மாதத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலத்தில் தொடங்கிவிட்டது. டன் கணக்கில் ஆட்டுக்கறி, குவியல் குவியலாகச் சோறு, தலைவாழை இலையில் ஆப்பைக்கறி பரிமாறும் போது வரும் கமகம கறிக்குழம்பு வாசனை பலரையும் இழுத்து வரும்.

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், வடகாடு, அணவயல், மேற்பனைக்காடு என சுற்றுவட்டாரத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆடி முதல் தேதியில் தொடங்கி கடைசி தேதி வரை சுமார் 500 முதல் ஆயிரம் பேர்கள் வரை கூட்டாக மொய் விருந்து வைத்து கோடிக்கணக்கில் மொய் வசூல் செய்த மகிழ்ச்சியான காலத்தை கஜா புயலும், கொரோனாவும் புரட்டிப் போட்டுவிட்டது. அதன் பிறகு போட்ட மொய்யாவது வந்தால் போதும் என்ற நிலைக்கு வந்துவிட்டனர். இந்த ஆண்டு ஆடி மாதம் தொடங்க வேண்டிய மொய் விருந்து ஒரு மாதம் முன்னதாக ஆனி மாதமே தொடங்கியுள்ளது. 

Moi feast started with Kamagamakum curry

இந்த ஆண்டின் முதல் மொய் விருந்து கீரமங்கலத்தில் நடந்தது. இதனையடுத்து ஆனி, ஆடி இரு மாதங்களும் கீலமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் மொய் விருந்துகள் நடக்கும் என்கின்றனர். மேலும் “மொய் என்பது தமிழர்களின் காலம் காலமான பழக்கவழக்கம். இதனை எந்தக் காலத்திலும் நிறுத்த முடியாது. இயற்கையின் மாற்றங்களால் வருவாய் குறைந்து சில வருடங்கள் வசூல் கொஞ்சம் தேங்கியது. ஆனால் விருந்துகள் தேங்கவில்லை. இன்னும் 100 ஆண்டுகள் ஆனால் மொய் என்ற பழக்கம் தொடரும்” என்கிறார் மொய் செய்ய வந்த பட்டிமன்ற பேச்சாளர் ஆதனூர் கோவி.தாமரைச்செல்வன்.