
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பெருங்காலூர், முகையூர், சிறுகாலூர், கொடியாளம், வடம்பூர், மணலூர் மற்றும் காட்டுமன்னார்கோவில் வட்ட பகுதிகளில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்களில் உளுந்து, பச்சை பயிரை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். இந்த பகுதிகளில் தற்போது உளுந்து, பச்சை பயிர் அறுவடை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோடை மழை நேற்று (03.04.2025) திடீரென பெய்யத் துவங்கியது. இந்த மழை 3 மணி நேரத்துக்கு மேலாக விட்டு விட்டுக் கொட்டி தீர்த்ததால் அறுவடை செய்யப்பட்டு விளை நிலங்களில் வைக்கப்பட்ட உளுந்து, பச்சை பயிர் செடிகள் அனைத்தும் மழையில் நனைந்து ஈரப்பதத்துடன் உள்ளது. அதனைக் காய வைப்பதற்கு 3 முதல் 5 நாட்கள் ஆகும் எனவும் ஆனால் ஈரப்பதத்துடன் இருப்பதால் முளைப்பு தன்மை ஏற்படும் என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், நெற்பயிர் பூ வரும் நேரத்தில் தொடர் மழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நெற் பயிரில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது உளுந்து பயிர் மூலம் வருவாய் கிடைக்கும் என்று எண்ணிய போது திடீரென பெய்த கோடை மழையால் உளுந்து பயிர் செடிகள் முளைப்பு தன்மை ஏற்பட்டுப் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதால் தமிழக அரசு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.