சிவகாசி தாலுகா – எம்.புதுப்பட்டி–மங்கலம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்திக்கு ராஜகுமாரியின் மகள் பவானியுடன் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாட்டினால் சத்தியமூர்த்தியிடமிருந்து பிரிந்த பவானி, தனது மகள் ஜெஷிகாவுடன் அம்மா வீட்டில் வசித்துவருகிறார். மாரியம்மன் கோவிலில் இருந்து 5 கி.மீ. தொலைவில், பேத்தி ஜெஷிகாவை அருகில் வைத்துக்கொண்டு ராஜகுமாரி நூறு நாள் வேலை பார்த்துக்கொண்டிருந்த இடத்துக்கு சத்தியமூர்த்தி சென்றபோது, அவரைப் பார்த்து அப்பா என்று கூப்பிட்டிருக்கிறார் ஜெஷிகா. இதைப் பார்த்து எரிச்சலான ராஜகுமாரி திட்டியிருக்கிறார். அதனால், சத்தியமூர்த்திக்கும் ராஜகுமாரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒருகட்டத்தில் ராஜகுமாரி ஆவேசமடைந்து தன் கையிலிருந்த மண்வெட்டியால் சத்தியமூர்த்தியின் தலையில் தாக்கியுள்ளார். அப்போது இன்னொரு உறவினரான குருவம்மாளும் தான் வைத்திருந்த மண்வெட்டியின் மரக்கட்டையால் சத்தியமூர்த்தியை மாறி மாறி அடித்துள்ளார். அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கிவிட்டபோது ராஜகுமாரியும் குருவம்மாளும் மண்வெட்டியைக் காண்பித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
தலையில் ஏற்பட்ட ரத்தக்காயத்துக்கு எம்.புதுப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்ற சத்தியமூர்த்தி, அடுத்து சிவகாசி அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், எம்.புதுப்பட்டி காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார். ராஜகுமாரி மற்றும் குருவம்மாள் மீது வழக்கு பதிவாகி விசாரணை நடைபெற்று வருகிறது.