Skip to main content

“வக்கீல் ஜோதியுடன் விவாதிக்க ஆ.ராசா தயாரா?”  - சவால்விட்ட வனத்துறை அமைச்சர் சீனிவாசன்

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

Minister dindigul sreenivasan public address in dindigul admk function

 

“2ஜி வழக்கில் தீர்ப்பு வரும்முன் அவசரப்படும் ஆ.ராசா, வக்கீல் ஜோதியுடன் விவாதிக்க தயாரா” என்று தி.மு.க.வினருக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சவால் விடுத்துள்ளார்.

 


திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வருகிற சட்டமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திண்டுக்கல் அங்குவிலாஸ் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன் கலந்துகொண்டார்.  இக்கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் சீனிவாசன், “திண்டுக்கல் தொகுதிக்கு சீட் கேட்டு ஜெயலலிதாவிடம் நான் சென்றபோது உடல் நலம் சரியில்லை என்று சொன்னார்கள். அதை தொடர்ந்து மூன்று  நாட்களாக போனபோதுதான் என்னை ஜெயலலிதா அழைத்து, ‘என்ன சீனிவாசன் மூன்று நாட்களாக வருகிறீர்களா’ என்று கேட்டார். ஆமாம், திண்டுக்கல் தொகுதி கேட்டிருக்கிறேன் என்று சொன்னவுடன் ‘உங்களுக்குத்தான் சீட் போய் தேர்தல் பணிகளை செய்யுங்கள்’ என்று கூறியதுடன் மட்டுமல்லாமல், ‘ஏற்கனவே நீங்கள் மத்திய அமைச்சராக இருந்திருக்க வேண்டியவர்  அது தவறிவிட்டது. இதில் வெற்றி பெற்று வாருங்கள் எனது அமைச்சரவையில் நீங்களும் இடம் பிடிப்பீர்கள்’ என்று கூறினார்கள். அதுபோல் நானும் தேர்தலில் போட்டி போட்டதின் மூலம் 25 ஆயிரம்  ஓட்டு வித்தியாசத்தில் தொகுதி மக்கள் வெற்றி பெற வைத்தனர். 

 

அதன்மூலம் ஜெயலலிதா சொன்னதுபோல், எனக்கு வனத்துறை அமைச்சர் பதவியைக் கொடுத்தார். அந்த நன்றியை நான், உயிருள்ளவரை மறக்க மாட்டேன். அதுபோல்  எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்காக ரூ.500 கோடிக்கு மேல் திட்டப் பணிகளை ஒன்றிய செயலாளர் ராஜசேகர் சொன்னதுபோல் நிறைவேற்றிக் கொடுத்து இருக்கிறேன். மீதமுள்ள பணிகளையும் கூடிய விரைவில் நிறைவேற்றி கொடுப்பேன். நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்களின் தேவை அறிந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதனால் எங்கு சென்றாலும் மக்கள் திரண்டுவந்து ஆதரவளிக்கின்றனர். ஆனால், அ.தி.மு.க.வை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் நினைக்கிறார். 

 

அதற்காக அ.தி.மு.க. அரசு மீது பொய்யான குற்றச் சாட்டுகளை சுமத்தினார். ஆனால், அது எதுவும் எடுபடவில்லை, தற்போது ஜெயலலிதா மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். 2ஜி ஊழலில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடித்த ஆ.ராசாவுக்கு ஜெயலலிதாவை பற்றி பேசுவதற்கு என்ன அருகதை இருக்கு.  2ஜி வழக்கில் சி.பி.ஐ. மேல்முறையீடு செய்துள்ளது. தினமும் விசாரணை நடைபெற்று விரைவில் தீர்ப்பு வெளியாக இருக்கிறது. அதில் ஆ.ராசா, நிரபராதி என்றால் பாராட்டலாம் அதற்குள் அவருக்கு என்ன அவசரமோ முதலமைச்சரை விவாதத்துக்கு அழைக்கிறார். ஜெயலலிதா வக்கீல் ஜோதி, ஆ. ராசாவை விவாதத்துக்கு அழைக்கிறார் உண்மையிலேயே தி.மு.க.வினருக்கு அரசியல் ஆண்மை இருந்தால் வக்கீல் ஜோதியுடன்  ஆராசா விவாதிக்க தயாரா, இதை நான் ஒரு சவாலாகவே கூறுகிறேன்.  தி.மு.க. ஆட்சியில் திண்டுக்கலில் மருத்துவக் கல்லூரிக்கு பூமி பூஜை நடத்தினார்கள். ஆனால், நிதி ஒதுக்கவில்லை அதேநேரம் திண்டுக்கல் உள்பட 11 ஊர்களில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்த உத்தமன் நம்ம முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதுபோல் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள  ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் இன்றைக்கு டாக்டர்களாக உருவாக்கியிருக்கிறார்கள். தமிழக மக்களின் ஆதரவும் அ.தி.மு.க.வுக்கு பெருகி வருகிறது. ஆத்தூர் காமராஜர் அணை நிரம்பி விட்டது இனி ஓராண்டுக்கு திண்டுக்கல் நகர மக்களுக்கு குடிநீர் பிரச்சனையை இருக்காது.  வேடசந்தூருக்கு கொடகனாறு  அணைக்கு தண்ணீர் திறந்து விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்”  என்று கூறினார்.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், உட்பட ஒன்றிய பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்