Skip to main content

“குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” - நிர்மலா தேவி தரப்பு!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
"Minimum punishment should be given" - Nirmala Devi side

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமியும் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அப்போது சிபிசிஐடி எஸ்.பி.யாக இருந்த ராஜேஸ்வரி தலைமையில் 9 தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். நிர்மலாதேவி உள்ளிட்ட மூவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பிறகு ஜாமீனில் வெளிவந்தனர்.

இந்த விவகாரம் குறித்து அன்றைய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர். சந்தானமும் விசாரணை நடத்தினார். அதே சமயம் இந்த வழக்கை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதற்கிடையே பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டுமென்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் (DYFI) மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில், ‘உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி வழக்கில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் மாணவிகள், புகாரளிக்கும் விசாகா கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை? ஆறு ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?’ என்று காமராஜர் பல்கலைக்கழகத்திடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ‘ஜூன் 7ஆம் தேதிக்குள் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி விளக்கமளிக்க வேண்டும்.’ என்றும் உத்தரவிட்டது. தமிழக அரசுத் தரப்பில்  ‘நிர்மலா தேவி வழக்கில் கீழமை நீதிமன்றம் ஏப்ரல் 26 ஆம் தேதி தீர்ப்பளிக்கவுள்ளது’எனத் தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தீர்ப்பு நாளான கடந்த 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். ஆனால் அன்றைய தினம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அப்போது, ‘உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை’ என்று அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். அன்றைய தினம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

"Minimum punishment should be given" - Nirmala Devi side

இதனையடுத்து இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றம் நேற்று (29.04.2024) தீர்ப்பு வழங்கியது. இதற்காக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பகவதி அம்மாள், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2ஆவது மற்றும் 3ஆவது நபர்களான முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபரான பேராசிரியை நிர்மலா தேவியை குற்றவாளி என அறிவித்து அவருக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தீர்ப்பளித்தார். அப்போது தீர்ப்பின் விவரங்களை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர் வாதிட்டார். அதற்கு பிற்பகல் 2.30 மணிக்கு மேல் தீர்ப்பு குறித்து அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். இருப்பினும் தீர்ப்பின் விவரம் நேற்று அறிவிக்கப்படவில்லை. இதனையடுத்து  நிர்மலா தேவிக்கான தண்டனை விவரங்கள் இன்னும் (30.04.2024) சற்று நேரத்தில் நீதிமன்றம தீர்ப்பின் விவரத்தை நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.

இந்நிலையில் நிர்மலா தேவி தரப்பில்“ 10 ஆண்டுகளுக்கும் குறைவான குறைந்தப்பட்ச தண்டனை வழங்க வேண்டும்” என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  அதற்கு அரசு தரப்பில், “ நிரிமலா தேவிக்கு குறைந்தப்பட்ச தண்டனை வழங்கக்கூடாது” என கடும் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பகவதி அம்மாள் தண்டனை விபரத்தை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தார். 

சார்ந்த செய்திகள்