Skip to main content

“கனமழைக்கு வாய்ப்பு” - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

Published on 22/05/2025 | Edited on 22/05/2025

 

Met Dept warns Chance of heavy rain

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாகக் கனமழை பொழிந்து வருகிறது. அந்த வகையில், சென்னை உள்படத் தமிழ்நாட்டின் பெரும்பாலான இடங்களில் கனமழை பொழிந்தது. இத்தகைய சூழலில் தான் சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (22.05.2025) நண்பகல் 01.45 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

அதிகப்பட்ச வெப்பநிலை தொண்டியில் 38.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சமவெளிப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையாக கரூர் பரமத்தியில் 22.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 2 முதல் 3° செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது. ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 3 முதல் 5° செல்சியஸ் வரை இயல்பை விட குறைவாகவும், இதர தமிழகத்தில் பொதுவாக இயல்பை ஒட்டியும் இருந்தது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரையில், தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 2 - 3 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது. கோவா - தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (22-05-2025) ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, அடுத்த 36 மணி நேரத்தில் வலுவடைய கூடும். அதன் பிறகு இது மேலும், வலுவடைய வாய்ப்புள்ளது. மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி வருகின்ற 27ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும்.

இன்றும், நாளையும் ( 23-05-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 27 மற்றும் 28ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்