Skip to main content

கருவறைக்குள் செல்ல அனுமதி மறுப்பு; பூசாரியின் கழுத்து அறுப்பு 

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
man who cut the neck of Karuppannasami temple priest

திருச்சி மலைக்கோட்டை அருகே கீழ ஆண்டார் வீதி- பாபு ரோடு சந்திப்பு பகுதியில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோயிலில் கீழ ஆண்டார் வீதி புதுத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்த்தசாரதி (வயது 45) என்பவர் கோயில் பூசாரி ஆக உள்ளார். இவருடைய சகோதரர்களும் பூசாரியாக உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் கோவிலுக்கு வந்த ஒருவர், கையில் ஒரு எலுமிச்சம் பழமும் கத்தியுடனும் உள்ளே சென்றார். சாமி சிலை முன் சுருட்டு பிடித்தபடி கருவறைக்குள் செல்ல முயன்றார். 

பூசாரி பார்த்தசாரதி அவரை தடுத்தார். அப்போது ஏற்பட்ட தகராறில் அந்த நபர் பூசாரியின் கழுத்தை கையில் வைத்திருந்த கத்தியால் அறுத்து விட்டார். இதில் பூசாரியின் இடதுபுற கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த மக்கள் பூசாரியை மீட்டு தேவஸ்தானம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அந்த நபரை கோயிலுக்குள் வைத்து பூட்டி விட்டனர். தகவலறிந்த கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோயிலை திறந்து அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

நீண்ட நேரம் விசாரணைக்கு பிறகு அவர் தென்னூர் இனாம்தார் தோப்பை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் குணசேகரன் (வயது 40) என்பது தெரிய வந்தது. தன்னை கருவறைக்குள் செல்ல விடாமல் தடுத்த போது தனக்கு சாமி வந்து ஆடியதாகவும் அதன் பிறகு என்ன நடந்தது என்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்