
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி குருபவானிகுண்டா கிராமத்தில் 97 ஆம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா நடைபெற்றது. இந்த எருது விடும் திருவிழாவில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் ஆந்திரா,கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்து ஓடின.
மேலும் குறைந்த நொடியில் இலக்கை அடைந்த எருதுக்கு முதல் பரிசு ரூ.1 லட்சம் என 50-க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த எருது விடும் திருவிழாவில் திருப்பத்தூர் மாவட்டம் மற்றும் பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் ஜோலார்பேட்டை அடுத்த ஏழரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த கதிர்வேல் மகன் அறிவழகன்(28) என்பவர் எருது விடும் திருவிழாவை காண வந்திருந்தார். அப்போது அவருடைய உறவினர் வீட்டின் வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு திருவிழாவை காணச் சென்றுள்ளார். அப்போது மர்ம நபர் ஒருவர் அறிவழகனின் இருசக்கர வாகனத்தில் கள்ளசாவி போட்டு பூட்டை திறந்து அங்கிருந்து இருசக்கர வாகனத்தை எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சி அருகே உள்ள வீட்டில் பதிவாகியுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து திம்மாம்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் எருது விடும் திருவிழாவில் இருசக்கர வாகனம் திருட்டு அதிகரித்துள்ளது. இதுவரை 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடு போய்வுள்ளன. அதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.