Skip to main content

உள்ளாட்சித் தேர்தல்: சொந்த மண்ணில் கரையேறிய இ.பி.எஸ்!

Published on 04/01/2020 | Edited on 04/01/2020

மக்களவை தேர்தலின்போது சொந்த மண்ணிலேயே படுதோல்வி அடைந்த எடப்பாடி தலைமையிலான அதிமுக, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஓரளவு சரிவில் இருந்து மீண்டுள்ளது. அதேநேரம், திமுக பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.


தமிழகத்தில் சென்னை மற்றும் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து, எஞ்சிய 27 மாவட்டங்களில் ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. முதல்கட்டமாக கடந்த டிசம்பர் 27- ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக டிசம்பர் 30- ஆம் தேதியும் தேர்தல் நடந்தது. 

local body election results salem district details admk vs dmk parties


சேலம் மாவட்டத்தில் பதிவான வாக்குகள் ஜன. 2- ஆம் தேதி எண்ணப்பட்டன. நள்ளிரவைக் கடந்தும் தொடர்ந்த வாக்கு எண்ணிக்கை ஜன. 3- ஆம் தேதி பகல் 11.00 மணியளவில் நிறைவடைந்தது. என்றாலும், ஒன்றியக்குழு உறுப்பினர்களின் வெற்றி குறித்த இறுதி நிலவரம் பிற்பகல் 1.30 மணியளவிலேயே வெளியிடப்பட்டது. 


இம்மாவட்டத்தில் மொத்தம் 385 கிராம ஊராட்சி மன்றத் தலைவர் பதவி, 3597 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி, 288 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் (அதாவது, 5000 ஓட்டு கவுன்சிலர்), 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி (50 ஆயிரம் ஓட்டு கவுன்சிலர்) என மொத்தம் 4299 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 


இவற்றில், 392 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 8 ஊராட்சி மன்றத் தலைவர்கள், 3 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 403 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

local body election results salem district details admk vs dmk parties


தமி-ழகத்தில் ஒட்டுமொத்த அளவில், ஆளும் கட்சியைவிடக் காட்டிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கணிசமான இடங்களை கூடுதலாக கைப்பற்றி இருந்தாலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், ஆளுங்கட்சியினரே அதிகளவில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளனர்.


அதாவது, சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 288 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், அதிமுக 131, பாமக 39, தேமுதிக 5, தமிழ் மாநில காங்கிரஸ் 1 என அதிமுக கூட்டணி 176 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி தரப்பில் திமுக 76, காங்கிரஸ் 4, மதிமுக 1, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 என மொத்தம் 89 இடங்களையும், சுயேச்சைகள் 29 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். 
 

local body election results salem district details admk vs dmk parties


கொங்கணாபுரம் ஒன்றியத்தில் மொத்தம் 10 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இவற்றில் ஒன்றில்கூட திமுக கூட்டணி வெற்றி பெறவில்லை. அதிமுக 8, பாமக 2 இடங்களிலும் வெற்றி பெற்று, கொங்கணாபுரம் ஒன்றியத்தை வாரி சுருட்டி உள்ளன. 


அதேபோல், மொத்தமுள்ள 29 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களிலும் அதிமுக கூட்டணியே அதிகளவில் வெற்றி பெற்றுள்ளன. அதாவது, அதிமுக 18, பாமக 4, தேமுதிக 1 என ஆளுங்கட்சி கூட்டணி 23 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளன. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளில் திமுக கட்சிக்கு 6 இடங்கள் மட்டுமே கிடைத்தன. 

 

local body election results salem district details admk vs dmk parties


கிராம ஊராட்சி மன்றத் தலைவர் தேர்தலைப் பொருத்தவரை ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்றவர்கள் தவிர, வெற்றி பெற்ற 375 பேரின் பெயர் பட்டியல், பெற்ற வாக்குகள் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. எனினும் சில புகார்கள் காரணமாக, கொளத்தூர் ஒன்றியத்தில் நவப்பட்டி கிராம ஊராட்சி மன்றத் தலைவர், ஓமலூர் ஒன்றியத்தில் வெள்ளக்கல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவுகள் மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.  
 

local body election results salem district details admk vs dmk parties


கடந்த மக்களவைத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளிலும் பெரும் பின்னடைவைச் சந்தித்திருந்த அதிமுகவுக்கு, இப்போதைய ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுகவைக் காட்டிலும் கூடுதல் இடங்களைக் கைப்பற்றி இருப்பது அக்கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்