
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் இன்று (11.05.2025) நண்பகல் 01.45 மணியளவில் வெளியிடப்பட்டுள்ள வானிலை முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்துள்ளது. புதுவையில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையம் பகுதியில் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சமவெளிப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தி: 22 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் பொதுவாக இயல்பை ஒட்டியும் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட குறைவாகவும் இருந்தது. வடதமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையிலும், தென்தமிழக உள்மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 38 முதல் 40 டிகிரி செல்சியஸ், வடதமிழக கடலோரப் பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33 முதல் 17 டிகிரி செல்சியஸ் வரையிலும் , தென்தமிழக கடலோரப்பகுதிகளில் 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் வரையிலும், மலைப்பகுதிகளில் பதிவாகியுள்ளது. 20 முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையிலும் பதிவாகியுள்ளது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையைப் பொறுத்த வரையில் தென்மேற்கு பருவமழை தெற்கு அந்தமான் கடல், நிகோபார் தீவு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வருகின்ற 13ஆம் தேதி வாக்கில் துவங்கக்கூடும். மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் (12-05-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை மறுநாள் (13-05-2025) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனால் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.