Skip to main content

நிரம்பியது வீராணம் ஏரி;மகிழ்ச்சியில் விவசாயிகள்!!

Published on 29/11/2018 | Edited on 29/11/2018

 

lake

 

தமிழகத்தின் மிக பெரிய ஏரியாக உள்ள வீராணம் ஏரி கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ளது. இது சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம் வட்டத்திலுள்ள விவசாயிகளின் வாழ்வாதரமாக இருந்து வருகிறது. இந்த ஏரியின் மூலம் 45 ஆயிரம் ஏக்கருக்கு மேல்விளைநிலங்கள் பாசனம் பெற்றுவருகிறது.

 

 

இந்த ஏரி கடந்த பிப்ரவரி மாதம் தண்ணீர் இல்லாமல் வறண்டு இளைஞர்கள் கிரிகெட் விளையாடும் மைதானமாக இருந்தது. அதன் பின்னர் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் சிறியளவில் மழை பெய்ததால் ஏரிக்கு தண்ணீர் கொஞ்சம் வந்தது.

 

இதனைதொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் கர்நாடகாவில் பெய்த கன மழையால் உபரி நீர் திறந்து விடப்பட்டது. அந்த நீர் மேட்டூர் வழியாக திருச்சி முக்கொம்பு, கீழணை வழியாக வீராணம் ஏரிக்கு வந்தது. அப்போது ஏரியின் முழுகொள்ளவான 47.50 அடியில் அணையின் பாதுகாப்பு கருதி 46.90 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. மேலும் ஏரிக்கு வரும் உபரி நீரை வெள்ளாறில் திறந்து விட்டதுடன் சென்னை குடிநீருக்கு வினாடிக்கு 70 கனஅடி நீர் அனுப்பபட்டது. அதன் பின்னர் விவசாயிகளின் நலன் கருதி சம்பா பயிர் சாகுபடிக்கு ஏரியிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் ஏரியின் நீர் மட்டம் தினம் தினம் குறைந்து கொண்டு இருந்தது. இதனால் விவசாயிகள் ஏரியில் இருந்து அறுவடை காலம் வரை தண்ணீர் கிடைக்குமா? என்று கேள்வியை எழுப்பி விவசாயிகள் அறுவடைமுடியும் வரை தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர்.

 

 

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கஜா புயலையொட்டி கடலூர் மாவட்டத்தில் மழை பெய்தது. மேலும் நவ,27,28,29 தேதிகளில் வீராணம் நீர் பிடிப்பு பகுதி உள்ளிட்ட மாவட்டத்தின் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் வீராணம் ஏரி 46.80 அடியை எட்டியுள்ளது. இதனையறிந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதில் சென்னை குடிநீருக்கு 75 கன அடி தண்ணீர் அனுப்பபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

   

சார்ந்த செய்திகள்