Skip to main content

துப்பாக்கிச்சூட்டில் முறையான சிபிஐ விசாரணைக்கு உதவிட முடிவுகள் மேற்கொள்ள வேண்டும் -முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

Published on 23/12/2018 | Edited on 23/12/2018
b

 

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்  கே.பாலகிருஷ்ணன்,  தமிழக முதல்வருக்கு ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டம் இயற்றுவது குறித்து நடைபெற உள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் உரிய முடிவுகள் எடுக்க வேண்டுமென கேட்டு கடிதம் எழுதியுள்ளார். 


அக்கடிதத்தில்,   ‘’தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலை  சுற்றுச்சூழலுக்கும் வாழ்வாதாரத்திற்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்ததால் அனைத்துப் பகுதி மக்களும் போராடினார்கள்.  14 அப்பாவிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.  இவையனைத்தையும் கணக்கில் கொண்டு தமிழக அரசும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்த ஆலையை மூட உத்தரவிட்டன. ஆயினும், ஆலையை திறக்க வேண்டுமென தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்துள்ளது.

 

இந்நிலையில், அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டத்தில், கீழ்க்கண்ட அம்சங்கள் குறித்து முடிவெடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.
1. தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு சிறப்புச் சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்.  இறுதி வரை ஆலையை நிரந்தரமாக மூடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உரிய முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

 

2. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய சாதாரண அப்பாவி மக்கள், குழந்தைகள், முதியவர்கள்  மீது காவல்துறை கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியது. துப்பாக்கிச்சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர், 50க்கும் மேற்பட்டவர்கள் துப்பாக்கி குண்டுகளால் காயமடைந்தனர், 200க்கும் மேற்பட்டவர்கள் தடியடியினால் காயமடைந்தனர்.


 
இது குறித்து சிபிஐ விசாரணை வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கும் தொடுக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிப்காட் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட அத்தனை வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும், துப்பாக்கி சூடு மற்றும் இதர விஷயங்கள் குறித்த காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மீதான புகார்கள் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் 14.08.2018 அன்று தீர்ப்பளித்தது.   தீர்ப்பின் அடிப்படையில் சிபிஐயும் விசாரணையை துவக்கியுள்ளது. 


 
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் தற்போதும் பணியில் நீடிப்பது முறையான விசாரணைக்கு உதவி செய்யாது. எனவே, துப்பாக்கிச்சூடு சம்பவத்தின்போது பணியில் இருந்த உயர் காவல்துறை  மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், துப்பாக்கிச்சூட்டில் சம்பந்தப்பட்ட காவலதுறையினரை தற்காலிக பணிநீக்கம் செய்து, முறையான சிபிஐ விசாரணைக்கு உதவிட முடிவுகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.’’என்று தெரிவித்துள்ளார்.


 

சார்ந்த செய்திகள்