Skip to main content

வருமுன் காப்போம் - கரோனா குறித்து கமல் வீடியோ வெளியீடு!

Published on 21/03/2020 | Edited on 21/03/2020


நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கரோனா வைரஸ் குறித்து பெரிய அளவில் அச்ச உணர்வு ஏற்பட்டுவரும் நிலையில், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து நடிகர் கமல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, " கரோனா வைரஸ் பாதிப்பு நான்காவது, ஐந்தாவது வாரத்தில் பன்மடங்கு அதிகரிப்பதை பல நாடுகளில் நாம் பார்த்திருப்போம். எதனால்? வைரஸ் தொற்று அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருக்கும் சமயத்தில பாதிக்கப்பட்டவர்கள் வெளியே சென்று வருகிறார்கள். பாதிக்கப்பட்டது 5 பேருனா, அவர்களிடம் இருந்து 25 பேருக்கு பரவும். அது இன்னும் 100 பேருக்கு பரவாம தடுக்க ஒரேஒரு வழி தான் இருக்கு. சோஷியல் டிஸ்டென்ஸ். விலகி இருத்தல். அதீத விழிப்புணர்வு தேவைப்படுகின்ற நான்காவது வாரத்தில் தமிழ்நாடு இருக்கின்றது. கூட்டம் கூடும் இடத்திற்கு செல்வதை அறவே தவிர்த்துவிடுங்க. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்லுங்கள். 
 


நான் இப்போது வெளியே நிற்பது கூட இந்த செய்தியை உங்களுக்கு தெரிவிக்கத்தான். இப்படி எல்லாம் செய்வதால் வைரஸ் உங்களுக்கு பரவாமலும், உங்களிடம் இருந்து அடுத்தவர்களிடம் பரவாமலும் இருக்கும். கரோனா தொற்று இருந்தாலே உயிருக்கு ஆபத்து என்பதெல்லாம் கிடையாது. ஆனால் வெகு சிலருக்கு அவங்க உடல்நிலையை பொறுத்து அது ஆபத்தாக மாறலாம். அதனால்தான் அனைவரிடமும் விலகி இருத்தல் நல்லது. வீட்டில் இருங்கள். மனசுக்கு பிடித்தவர்கள் இருந்தால் பேசுங்கள். ஆனால், வாங்க பேசலாம் என்று யாராவது கூட்டம் சேர்க்க முயற்சி செய்தால் அதனை தவிர்த்து விடுங்கள். நம்மால் அவர்களுக்கோ, அவர்களால் நமக்கோ பாதிப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ள வேண்டும். வந்தால் செய்ய வேண்டியதை வரும் முன்னாடியே செய்ய வேண்டுகிறோம்" என்றார்.

 

சார்ந்த செய்திகள்

 
News Hub